ஜொகூர் செம்பருத்தி தோழர்கள் ஏற்பாட்டில், ‘நிலங்களின் நெடுங்கணக்கு’ நூல் வெளியீட்டு விழா, எதிர்வரும் ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை, இரவு மணி 7.45-க்கு, BZZ தங்கும் விடுதியில் (67, ஜாலான் ஜோகேட் 8, தாமான் நேசா, ஸ்கூடாய், ஜொகூர்) நடைபெறவுள்ளது.
நம் நாட்டில் தொடர்ந்து சமூகக் கதைகள்தான் எழுதப்பட்டு வருகின்றன. மிகவும் அபூர்வமாகவே மர்மம், துப்பறிதல், ஹாரர், த்ரில்லர் வகை கதைகள் எழுதப்படுகின்றன. மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு, மதியழகன் முனியாண்டி ‘நிலங்களின் நெடுங்கணக்கு’ என்கிற இந்தத் ‘த்ரில்லர்’ வகை குறுநாவலை எழுதியுள்ளார்.
இக்குறுநாவலை, தெமொங்கோங் இப்ராஹிம் ஆசிரியர் கல்விக் கழக விரிவுரையாளர் திருமிகு சேதுபதி இராமசாமி திறனாய்வு செய்யவுள்ளார். மேலும், நிகழ்ச்சியில், ஆசிரியர், ‘சிவநேயச் செல்வர்’ வாசுதேவன் இலட்சுமணனின் நூலாசிரியர் அறிமுகமும் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர், திரு இராஜேந்திரன் பெருமாள் அவர்களின் வாழ்த்துரையும் வழங்க உள்ளனர்.
சரித்திர ஆராய்ச்சிக்காக, சுவிட்சர்லாந்தில் இருந்து மலேசியா வரும் செல்லத்துரை என்கிற ஆராய்ச்சியாளர், ஒருநாள் காணாமல் போய்விடுகிறார். எங்குத் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இருபது வருடங்கள் கழித்து, காணாமல் போன ஆய்வாளர் செல்லத்துரையைத் தேடி, ஓர் இளம் வழக்கறிஞர் புறப்படுகிறார். செல்லத்துரையைத் தேடும் நடவடிக்கையில், அந்த இளம் வழக்கறிஞர் சந்திக்கும் இன்னல்கள், தடங்கல்கள், ஆபத்துகள் எனக் கதை கடந்து செல்கிறது. இந்தக் கதை முழுக்க முழுக்க மலேசிய மண் சார்ந்து எழுதப்பட்டது.
ஒவ்வொரு மண்ணுக்குப் பின்னாடியும் ஒரு கதை உண்டு. ஒவ்வொரு நிலத்துக்கு பின்னாடியும் ஒரு கதை உண்டு. அந்தக் கதைகள் நீண்ட கணக்கு கொண்டது. ஒவ்வொரு நிலத்துக்கும் ஒரு வரலாறு உண்டு. ஆயிரம் இரண்டாயிரம் வருடமாக இந்த வரலாறுகள் தொடர்ந்து வருகின்றன. அந்த வகையில், மலேசியாவில் உள்ள ஒவ்வொரு நிலத்துக்கும் ஒரு நீண்ட நெடிய வரலாறு உண்டு. அந்த வரலாறு குறித்து, குறிப்பாக ஜொகூர், ‘கோத்தா கிலாங்கி‘ வரலாறு தொட்டு இந்தக் கதை பேசும்.
நூலாசிரியர் மதியழகன் சில ஆண்டுகளாக முகநூல், வலைப்பக்களில் தொடர்ந்து கதைகள், கட்டுரைகள் எழுதி வருகிறார். பல நீண்ட அரசியல் கட்டுரைகள் எழுதிய இவர், ஓர் அறிமுக எழுத்தாளர் ஆவார்.
இந்நாவலை, சமூக ஆர்வளர், செல்வக்குமரன் கண்ணன், வாழ்த்துரை வழங்கி, வெளியிடவுள்ளார்.
வாசிக்கும் ஆர்வம், குறிப்பாக, த்திரில்லர் கதைகளில் ஆர்வமுள்ளவர்கள், இந்நூல் அறிமுக விழாவில் கலந்துகொண்டு பயன் பெறலாம்.
மேல் விவரங்களுக்குத் தொடர்புகொள்க :- 013 7586881, 012 7499761, 018 9884250
naan