ஜொகூர் ஆட்சிக்குழுவில் இருந்து இருவர் நீக்கப்படலாம்

ஜொகூர் மந்திரி பெசாரை நியமிப்பதற்கு முன்னர், புதிய மந்திரி பெசார் , ஜொகூர் ஆட்சிக்குழுவைச் சீரமைக்க வேண்டுமென ஜொகூர் சுல்தான், சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார் நிபந்தனை விதித்தது அறிந்ததே.

இதனையே, பதவியேற்ற புதிய மந்திரி பெசார் ஷாருட்டின் ஜமாலும் அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, மஸ்லான் பூஜாங் (பெர்சத்து – புத்ரிவங்சா) மற்றும் தான் ஹோங் பிங் (டிஏபி – ஸ்கூடாய்) இருவரும், ஜொகூர் ஆட்சிக்குழுவில் இருந்து நீக்கப்படலாம் என முக்கியத் தரப்பு ஒன்று மலேசியாகினியிடம் தெரிவித்துள்ளது.

பொதுத் துறை, உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து துறைக்குப் பொறுப்பான மஸ்லான் மற்றும் உள்ளூராட்சி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைக்கு பொறுப்பான தான் இருவர் மீதும் அரண்மனைக்கு அவ்வளவாக விருப்பம் இல்லை என்றும் அந்தத் தரப்பு கூறியது.

ஜொகூர் மாநில டிஏபி செயலாளருமான தான், இதற்கு முன்னர் மெங்கிபோல் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது, 2017-ல் சட்டமன்றக் கூட்டத்தை நேரடி ஒளிபரப்பு செய்யக்கூடாது எனும் சுல்தான் இப்ராஹிமின் கருத்துக்கு உடன்படவில்லை எனத் தெரிகிறது.

அதுமட்டுமின்றி, அவ்விஷயத்தில், சுல்தானை வற்புறுத்துமாறு, அப்போதைய மாநில அரசாங்கத்தை (பிஎன்) வலியுறுத்தியும் உள்ளார்.

இதற்கிடையே, ஜொகூர் டிஏபி தலைவர், லியு சின் தோங்-கிடம் இதுபற்றி தெரிவிக்கப்பட்டுவிட்டது என தெரிகிறது. ஆனால், தன்னிடம் ஷாருட்டின் எதுவும் பேசவில்லை என லியு மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

இதுபற்றி கருத்து கூற விரும்பவில்லை என்ற தான், முடிவை டிஏபி தலைமையிடம் விட்டுவிடுவதாகச் சொன்னார்.

மஸ்லானை, இதுவரை தொடர்புகொள்ள முடியவில்லை.