அம்னோ தகவல் பிரிவுத் தலைவர் கூறிய கருத்தைக் கத்தோலிக்க ஆயர் சாடுகிறார்

அம்னோ தகவல் பிரிவுத் தலைவர் அகமட் மஸ்லான், ஒர் எதிர்க்கட்சியை “கிறிஸ்துவ மயத்துக்கான ஏஜண்டுகள்” என கூறியுள்ள குற்றச்சாட்டு “அச்சத்தை அதிகரிக்கும் நோக்கத்தை” கொண்டுள்ளதாக கத்தோலிக்க ஆயர் டாக்டர் பால் தான் சீ இங் வருணித்துள்ளார்.

“அம்னோ ஆண்டுப் பொதுப் பேரவையில் கலந்து கொள்ளும் பேராளர்கள் உணர்வுகளைத் தூண்டும் கருத்துக்களை தவிர்க்க வேண்டும் என பிரதமர் விடுத்துள்ள கட்டுப்பாடு பின்பற்றப்படும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்,” என அவர் சொன்னார்.

ஆயர் தான் மலாக்கா ஜோகூர் கத்தோலிக்க திருச்சபயின் தலைவரும் ஆவார்.

28 மில்லியன் மலேசியர்கள் அம்னோ பேராளர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருப்பதால் அவர்கள் உணர்வுகளைத் துண்டும் கருத்துக்களை ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் சொல்லக் கூடாது என இவ்வாரத் தொடக்கத்தில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் வேண்டிக் கொண்டதை அவர் சுட்டிக் காட்டினார்.

“ஆனால் இங்கு அந்தக் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர், பிரதமர் கூறிய ஆலோசனையை மீறுகிறார். அவர் அதனை எப்படிச் செய்கிறார்? பூச்சாண்டியைக் காட்டி அச்சத்தை ஊட்டுகின்ற வகையில்  ஆத்திரத்தை  மூட்டுகிறார்”, என மலேசியா கத்தோலிக்க ஆயர்கள் மாநாட்டுத் தலைவருமான அவர் வருத்தமுடன் கூறினார்.

நேற்று அம்னோ பொதுப் பேரவைக்கு முந்திய பொதுக் கருத்தரங்கு ஒன்றில் பேசிய அகமட் மஸ்லான், டிஏபி, அரச அமைப்புக்களை மதிக்கவில்லை என்பதாலும் கிறிஸ்துவ மயத்துக்கான ஏஜண்டுகளாக திகழ்வதாலும் அடுத்த பொதுத் தேர்தலில் பக்காத்தான் அதிகாரத்தைப் பிடிக்குமானால் “மலாய் மொழி காணாமல் போய் விடும். மலாய் சுல்தான்களுக்கு பிரியாவிடை கூறி விடலாம். இஸ்லாத்துக்கும் பிரியாவிடை சொல்லி விடலாம்,” எனக் கூறியிருந்தார்.

பேச்சு வன்மையுடைய அரசியல்வாதிகள் கிறிஸ்துவ சமயத்தை பூச்சாண்டியாக மாற்றும் வேலையைச் செய்து கொண்டிருக்கின்றனர். பேராக்கில் உள்ள பொறுப்பற்ற ஒரு முப்தியும் சிலாங்கூரில் பிடிவாதமான ஆட்சி மன்ற உறுப்பினர் ஒருவரும் மட்டுமே அந்த வேலையைச் செய்து கொண்டிருப்பதாகக் கருதப்பட்டது. ஆனால் இப்போது அது பிளேக் நோயைப் போல வேகமாக பரவிக் கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது,” என அந்த ஆயர் கூறினார்.

TAGS: