தீ அணைப்பு, மீட்புத் துறை (எப்ஆர்டி) மார்ச் 23-இல், கோப்பெங் நெடுந்தூர ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொண்டு காணாமல்போன முகம்மட் அஷ்ரப் ஹசானைத் தேடும் பணியைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
உள்ளூர் மக்கள் கேட்டுக்கொண்டதால் தேடும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதாக ஊராட்சி, வீடமைப்பு அமைச்சர் ஸுரைடா கமருடின் கூறினார்.
அப்பக்தியில் காணாமல்போனவர்களைத் தேடிக் கண்டுபிடித்த அனுபவம் தங்களுக்கு இருப்பதால் இரண்டு மூன்று நாள்களுக்குத் தேடும் பணியைத் தங்களிடம் விட்டுவிடுமாறு உள்ளூர் மக்கள் கேட்டுக்கொண்டதால் எப்ஆர்டியும் போலீசும் தேடும் பணியைத் தற்காலிகமாக நிறுத்தி இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.
ஜோகூர் மூவாரைச் சேர்ந்தவர் முகம்மட் அஷ்ராப். கடந்த மார்ச் 23-இல், கோப்பெங் 25கிலோ மீட்டர் ஓட்டப்பந்துய போட்டியில் கலந்துகொண்ட 485 பேரில் அவரும் ஒருவர். பந்தயம் முடிவடைந்து அனைவரும் திரும்பி வந்து விட்டனர். அஷ்ராப் மட்டும் திரும்பி வரவில்லை.
ஏற்பாட்டாளர்களும் மற்ற ஓட்டக்காரர்களும் தேடிப் பார்த்தனர். அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே, மறுநாள் அவரைக் காணவில்லை எனப் போலீசில் புகார் செய்தார்கள்.