மைக்கா ஹோல்டிங்சில் எம்ஏசிசி விசாரணை, 5 வளாகங்களில் இன்று வேட்டை

மைக்கா ஹோல்டிங்ஸ் பங்குகளையும் சொத்துகளையும் தவறாகப் பயன்படுத்தியது தொடர்பிலான குற்றச்சாட்டை ஆராய, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி),  கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள சில வளாகங்களில் இன்று தனது வேட்டையைத் தொடங்கியது.

அம்முதலீட்டு நிறுவனத்துடன் தொடர்புடைய, வணிக அலுவலகங்கள் உட்பட, பெட்டாலிங் ஜெயா மற்றும் டூத்தா மாஸ்ஸில் உள்ள நான்கு கட்டிடங்களில் எம்ஏசிசி அதிகாரிகள் சோதனை நடத்தியதாக மலேசியாகினிக்குத் தகவல் கிடைத்துள்ளது.

கடந்த செவ்வாய் அன்று, பிரிக்ஃபீட்ல்ஸ்சில் உள்ள, மைக்கா ஹோல்டிங்ஸ் செயலாளர் அலுவலகத்தின் நடந்த சோதனையை அடுத்து, இன்று இந்த 4 இடங்களையும் அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர்.

அதிகாரத் துஷ்பிரயோகம் மற்றும் ஊழல் சம்பந்தப்பட்ட சில ஆவணங்களுடன், ஒரு நபர் அளித்த புகாரை அடுத்து, ம.இ.கா.-வுக்குச் சொந்தமான அந்நிறுவனத்தில் எம்ஏசிசி விசாரணை மேற்கொண்டு வருவதாக ஆதாரங்கள் கூறியுள்ளன.

சம்பந்தப்பட்ட ஆவணங்களை மட்டுமே இதுவரை சேகரித்து வருவதால், யாரிடமும் இன்னும் வாக்குமூலம் பதிவு செய்யப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

நாளை, அவர்களின் பட்டியலில் இருக்கும் இன்னும் சில இடங்களில் வேட்டை தொடரும் என்றும் அந்த ஆதாரம் தெரிவித்தது.

2009-ம் ஆண்டில், ம.இ.கா.-வுக்குச் சொந்தமான அந்நிறுவனம் மூடப்படுவதற்கு முன்னர், மைக்கா ஹோல்டிங்ஸ் தலைமை நிர்வாக அதிகாரியான எஸ் வேல்பாரியுடன் தொடர்புடைய சில நிறுவனங்களுக்கு, மில்லியன் கணக்கான ரிங்கிட் திருப்பிவிடப்பட்டது என, சரவாக் ரிப்போர்ட் இணையத்தளம் கடந்த பிப்ரவரியில் செய்தி வெளியிட்டிருந்தது.

2003 மற்றும் 2009-ம் ஆண்டுகளுக்கு இடையில், பணமாகவும் பிற வடிவத்திலும், வேல்பாரி தொடர்புடைய நிறுவனங்களுக்குப் பணம் மாற்றப்பட்டது என்று அந்த இணையதளம் கூறுகிறது.

மைக்கா ஹோல்டிங்ஸ், முன்னாள் மஇகா தலைவரும், அம்னோவின் நெருங்கிய நட்பு கொண்டவரும், வேல்பாரியின் தந்தையுமான எஸ் சாமிவேலுவின் சிந்தனையில் உதித்த திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

1980-களின் ஆரம்பத்தில், மைக்கா முதலீட்டு நிறுவனம் நிறுவப்பட்டது. பெரும்பான்மை நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்ட மலேசிய இந்தியர்களிடமிருந்து, RM100 மில்லியன் முதலீடுகள் வரை திரட்டப்பட்டது. இருப்பினும், தவறான நிர்வாக முறையின் காரணமாக, வருவாய் இல்லாமல், முதலீட்டாளர்களுக்கு மிகுந்த இழப்புகள் ஏற்பட்டது.