வாங் கெலியான் முகாம்களில் கைப்பற்றிய பொருள்கள் என்னிடம் கொடுக்கப்படவில்லை- போலீஸ் அதிகாரி

வாங் கெலியான் முகாம்கள்மீதான அரச விசாரணை ஆணையத்திடம் இன்று சாட்சியம் அளித்த போலீஸ் அதிகாரி ஒருவர், தாய்லாந்து எல்லை அருகில் காட்டுக்குள் இருந்த முகாம்கள்மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது கைப்பற்றப்பட்ட பொருள்கள் தன்னிடம் ஒப்படைக்கப்படவில்லை என்றார்.

அப்படி ஒப்படைக்கப்பட்டிருந்தால் அது தன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் என்று எம்.ஜோ கிங் என்ற அந்த அதிகாரி கூறினார்.

அதேவேளை தன் உதவி அதிகாரி முகம்மட் மொஸ்ஸாடிக் அஸ்னியிடம் அப்பொருள்களை வைத்துக்கொள்ளுமாறு கூறியதாகவும் நினைவில்லை என்றார்.

“எந்தப் பொருளும் என்னிடம் கொடுக்கப்படவில்லை.

“பொருள்களை வைத்துக்கொள்ளுமாறு(மொஸ்ஸாடிக்கிடம்) கூறியதாகவும் நினைவில்லை. என்னிடம் கொடுத்திருந்தால் என் அறிக்கையில் அதைக் குறிப்பிட்டிருப்பேன்”, என்றார்.

நேற்று ஆணையத்திடம் சாட்சியமளித்த மொஸ்ஸாடிக், காட்டுக்குள் இருந்த முகாம்கள் பற்றித் தகவல் கிடைத்ததும் பதின்மர் அடங்கிய ஒரு குழுவுடன் தான் அங்கு சென்றதாகக் கூறினார்.

ஆனால், அங்கிருந்தவர்கள் போலீசைக் கண்டதும் தப்பி ஓடி விட்டனர். அதன் பின்னர் தன் குழுவினரிடம் முகாமைச் சோதனையிடச் சொன்னதாகவும் அச்சோதனையில், தாய் மொழியில் எழுதப்பட்ட ஒரு குறிப்புப் புத்தகம், தாய்லாந்து காரோட்டும் லைசென்ஸ், ஒரு நோக்கியா கைபேசி, மூன்று சிம் அட்டைகள், ஒரு குறுவட்டு இயக்கி, பல குறுவட்டுகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

அப்பொருள்கள் எல்லாம் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டன.

கைப்பற்றிய பொருள்கள் 9-நாள்கள் தன்னிடம் இருந்ததாகவும் பின்னர் அவற்றை மேலதிகாரி முகம்மட் அசிசி முகம்மட்டிடம் ஒப்படைத்து விட்டதாகவும் மொஸ்ஸாடிக் கூறினார்.