பினாங்கு டிஏபி கூட்டம் காரசாரமாக இருக்குமாம்

அடுத்த ஞாயிற்றுக்கிழமை பினாங்கு நடைபெறும் டிஏபி கூட்டத்தில் பக்கத்தான் ஹரப்பானின் 11-மாத ஆட்சி குறித்து சர்ச்சைக்குரிய கேள்விகள் எழுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்ச்சைக்குரிய சில விவகாரங்கள் குறித்து கட்சித் தலைவர்கள் அளிக்கும் விளக்கத்தைக் கேட்க உறுப்பினர்கள் ஆர்வத்துடன் இருப்பதாகக் என கட்சியின் மூத்த தலைவர் பி.இராமசாமி கூறினார்.

“கட்சித் தலைவர்கள் சில விவகாரங்கள் குறித்து கட்சியினருக்கு நேரடி விளக்கமளிக்க வருகிறார்கள். இது மிகவும் வரவேற்கத் தக்கது”, என்று இராமசாமி மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

“பொதுமக்களைப் போலவே கட்சி உறுப்பினர்களும் நாட்டில் சில சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்குத் தடங்கலாய் இருக்கும் காரணங்களைத் தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள். அவர்கள் கேட்க விரும்புவது உண்மையான காரணங்களை, சாக்குப்போக்குகளை அல்ல”, என பினாங்கு இரண்டாவது துணை முதல்வருமான இராமசாமி கூறினார்.

இராமசாமியே சர்ச்சைக்குரிய பல விவகாரங்களை எழுப்பி வந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் அவர் தகுதிபெற்ற மாணவர்களுக்கு மெட்ரிகுலேசன் பயில இடம் கிடைக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பியிருந்தார்.