குத்தகை தொழிலாளர்கள் பற்றி, சிவநேசனுக்கு விளக்கமளிக்க பி.எஸ்.எம். தயார்

பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும் சுங்கை சட்டமன்ற உறுப்பினருமான சிவநேசன் அவர்களுக்கு, மலேசிய சோசலிசக் கட்சியின் தொழிலாளர் பிரிவு பொறுப்பாளர் சிவரஞ்சனி மாணிக்கம் எழுதிய திறந்த மடல்.

மாண்புமிகு சிவநேசன் அவர்களுக்கு,

உங்கு ஓமார் போலிடெக்னிக் கல்லூரியில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளர்கள் பிரச்சனையில், மலேசியக் கல்வி அமைச்சுக்குப் பங்கிருப்பதாக, கல்வி அமைச்சர் மாண்புமிகு மஸ்லி மாலேக் அவர்கள் அலுவலகமே ஒப்புக்கொண்டதோடு, தாங்கள் நியமித்த குத்தகையாளர் மீது நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் மலேசிய சோசலிசக் கட்சியிடம் (பி.எஸ்.எம்.) கூறியுள்ளது.

இதையே நேற்று ஆள்பல இலாகாவும் தொழிலாளர்களிடம் தெரிவித்தது. அப்படியிருக்க, இன்று நீங்கள் வெளியிட்டிருக்கும் பத்திரிக்கை அறிக்கை எதற்கும் உதவாத ஒன்றாகிவிட்டது.

அரசாங்க வளாகங்களில், குத்தகை வேலை முறையினால் தொழிலாளர்கள் பல பிரச்சனைகளை எதிர்நோக்கி வருகின்றனர். இந்தத் தொழிலாளர்களுக்குச் சம்பளம் கொடுப்பது தனியார் குத்தகையாளராக இருந்தாலும், அந்தக் குத்தகையாளர்களுக்கு குத்தகை வழங்குவது அரசாங்கமே.

ஆக, மறைமுகமாக அரசாங்கம்தானே இவர்களுக்குச் சம்பளம் கொடுக்கிறது. அரசாங்க வளாகங்களில் என்ன வேலை செய்ய வேண்டும் என்பதையும், அந்த அலுவலகங்களில் உள்ளவர்கள்தானே முடிவும் செய்கின்றனர்.

உதாரணத்திற்கு, உங்கு ஓமார் போலிடெக்னிக் கல்லூரியில் எந்த இடத்தில் சுத்தம் செய்ய வேண்டும் என்பதை, அக்கல்லூரியின் நிர்வாக அதிகாரிகளே தொழிலாளர்களிடம் கட்டளை இடுகின்றனர். அப்படி இருக்க, வேலை செய்யும் இடத்திற்கும் தொழிலாளர்களுக்கும் சம்பந்தமே இல்லை என்று கூறுவது என்ன நியாயம்?

சிவநேசன் அவர்களே,

இந்தக் குத்தகை முறையில் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனையைக், கடந்த மார்ச் 27-ம் தேதி, பி.எஸ்.எம். மலேசியக் கல்வி அமைச்சரின் பார்வைக்குக் கொண்டு சென்றது. கல்வியமைச்சர் இந்தப் பிரச்சனைகளைக் கேட்டு மிகவும் வருத்தமடைந்தார். அக்குத்தகையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் வாக்குறுதி அளித்தார்.

மேலும், இரண்டு நாட்களுக்கு முன்பு, பள்ளிகளில் பணிபுரியும் பாதுகாவலர்களின் குத்தகை முறையை மேம்படுத்துவதில் எங்களின் ஆலோசனையைப் பகிர்ந்து கொள்வதற்காகவும் எங்களை அழைத்திருந்தார்.

நிலைமை இப்படி இருக்கையில், குத்தகை தொழிலாளர் முறை பற்றியும், அதில் தொழிலாளர்களுக்கு நடக்கும் அநீதிகள் பற்றியும் சிறிதும் கண்டறியாமல், மேலோட்டமாக கருத்துரைக்கும் உங்களைப் போன்ற அரசியல்வாதிகளால் மக்களுக்கு எப்படி நன்மை நடக்கும்?

ஆக, சிவநேசன் அவர்களே, இன்று நீங்கள் வெளியிட்ட அறிக்கையின் வழி, நாட்டில் தொழிலாளர்கள் குத்தகை முறையினால் பாதிக்கப்பட்டு வருவதை நீங்கள் உணராமல் இருப்பது தெரிகிறது. இது தொடர்பாக விளக்கம் பெற விரும்பினால், நீங்கள் பி.எஸ்.எம். கட்சியைத் தாராளமாக அழைக்கலாம்.

தொழிலாளர் வர்க்கத்தை ஒடுக்குமுறையிலிருந்து விடுவிப்பதற்கே நமது போராட்டம், அவர்களை மேலும் துன்புறுத்த அல்ல என்பதை உங்களுக்குத் தெரிவிக்க நான் கடமைபட்டுள்ளேன்.

நன்றி.

சிவரஞ்சனி மாணிக்கம்