ஜொகூர் மாநிலப் புதிய ஆட்சிக்குழுவில், 3 புதிய முகங்கள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவர்களில் இருவர் தெனாங் சட்டமன்ற உறுப்பினர், முகமட் சோலிஹான் பட்ரி மற்றும் புக்கிட் பெர்மாய் சட்டமன்ற உறுப்பினர், தோஸ்ரின் ஜார்வாந்தி என ஜொகூர் அரண்மனைக்கு மிகவும் நெருக்கமான தரப்பு மலேசியாகினியிடம் தெரிவித்தது.
பெர்சத்து கட்சியைச் சேர்ந்த அவர்கள் இருவரும், புத்ரி வங்சா சட்டமன்ற உறுப்பினர் மஸ்லான் பூஜாங் மற்றும் கெம்பாஸ் சட்டமன்ற உறுப்பினர் ஒஸ்மான் சப்பியான் இருவருக்கும் பதிலாக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், ஸ்கூடாய் சட்டமன்ற உறுப்பினர், தான் ஹோங் பின்-க்குப் பதிலாக, பெர்லிங் சட்டமன்ற உறுப்பினர் சியோ யீ ஹொவ் வரலாம் என்றும் அந்தத் தரப்பு கூறியது. அவர்கள் இருவருமே டிஏபியைச் சேர்ந்தவர்கள்.
இருப்பினும், புதிய ஆட்சிக்குழுவில், டிஏபி சார்பாக, ஜெமெந்தா சட்டமன்ற உறுப்பினர் தான் சென் ச்சூன் இடம்பெறுவார் என டிஏபி தரப்பு மலேசியாகினியிடம் தெரிவித்துள்ளது.
“மஸ்லான் மற்றும் தான் இருவரும் நீக்கப்படுவது கிட்டதட்ட உறுதியாகியுள்ளது.
“மாற்றம் ஏதும் இல்லை என்றால், தோஸ்ரின் மற்றும் சோலிஹான் இருவரும் புதிய ஆட்சிக்குழுவில் இடம்பெறுவர்,” என அந்த ஆதாரம் கூறியது.
11 மாதங்கள், ஜொகூர் மந்திரி பெசாராக இருந்த ஒஸ்மான் சப்பியான் அப்பதவியில் இருந்து விலகியதைத் தொடர்ந்து, ஏப்ரல் 14-ல் ஷாருட்டின் மந்திரி பெசாராக பதவி ஏற்றார்.
ஜொகூர் சுல்தான், சுல்தான் இப்ராஹிம், புதிய மந்திரி பெசாரை நியமிக்க, ஆட்சிக்குழுவை மாற்றியமைக்க வேண்டுமென நிபந்தனை இட்டார் என ஒஸ்மான் கூறினார்.
தான், மஸ்லான் இருவரும் அரண்மனையின் தேர்வு அல்ல எனக் கூறப்படுகிறது.
புதிய ஆட்சிக்குழு, நாளை பதவி ஏற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆட்சிக்குழுவில் ஒட்டுமொத்தத் தரவரிசையும் சீரமைக்கப்படும் வாய்ப்பும் உள்ளதாக மலேசியாகினியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.