டிஏபி முக்கிய விவகாரங்களில் கருத்துரைக்கத் தவறுவதில்லை- தெரேசா கொக்

டிஏபியை விமர்சிப்பவர்கள் குறைகூறுவதுபோல் முக்கிய விவகாரங்களில் அது வாயைப் பொத்திக்கொண்டிருப்பதில்லை என அக்கட்சியின் துணைத் தலைமைச் செயலாளர் தெரேசா கொக் கூறினார்.

முக்கிய விவகாரங்களில் துணிச்சலாகக் கருத்துரைக்கும் கட்சியான டிஏபியால் அமைச்சரவையைக் கட்டுப்படுத்தி வைக்க முடிவதில்லை, கொள்கைகள் தடம் மாறும்போது தடுக்க முடிவதில்லை, கொடுத்த வாக்குறுதிகளை அரசாங்கத்தால் நிறைவேற்ற முடியாதபோது அதைச் சரிசெய்ய முடிவதில்லை என்றெல்லாம் குறைகூறப்பட்டுள்ளது.

குறிப்பாக, முன்பு பிஎன் ஆட்சியில் மசீச எப்படி நடந்துகொண்டதோ அப்படித்தான் டிஏபி நடந்துகொள்வதாகக் கூறப்படுகிறது.

ஆனால், தெரேசா கொக் அதை மறுத்தார். “டிஏபி வாயைப் பொத்திக்கொண்டிருக்கும் ஒரு கட்சி அல்ல”, என்றவர் மலேசியாகினியிடமும் கினிடிவியிடமும் கூறினார்.

விமர்சகர்கள் டிஏபி ஒரு எதிர்க்கட்சிபோல நடந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஒரு விவாகரம் பிடிக்கவில்லை என்றால் (அரசாங்கத்தைச்) சாட வேண்டும் என்று நினைக்கிறார்கள் என்றவர் சொன்னார்.

“நாங்கள் இப்போதும் (தேவையான நேரங்களில்) சொல்ல வேண்டியதைச் சொல்லத்தான் செய்கிறோம். சரி, எப்படிச் சொல்வது? வெளிப்படையாக சொல்வதா, லைனாஸ் விவகாரத்தில் இரண்டு அமைச்சர்கள் சர்ச்சையிட்டது செய்தித்தாள்களில் எல்லாம் வந்ததே, அப்படிச் செய்ய வேண்டுமா?

“அதைத்தான் மக்களுக்காகக் குரல் கொடுப்பது என்கிறீர்களா? நான் அப்படி நினைக்கவில்லை”, என மூலத் தொழில் அமைச்சருமான கொக் கூறினார்.

“நாங்கள் சொல்ல வேண்டியதை அமைச்சரவையில் சொல்கிறோம். பொதுவில் பேசுவதைவிட அதுதான் நல்லது”, என்றாரவர்.