ஜொகூர் சுல்தான் முன்னிலையில், 10 ஆட்சிக்குழு உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்

ஜொகூர் சுல்தான், சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்மாயில் முன்னிலையில் ஜொகூர் மாநில புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் 10 பேர் சத்தியப் பிரமாணம் எடுத்துகொண்டனர்.

இன்று காலை, ஜொகூர் பாரு புக்கிட் ஷெரின் அரண்மனையில் இந்தப் பதவியேற்பு வைபவம் இனிதே நடந்தேறியது.

ஜொகூரின் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர் பட்டியல் பின்வருமாறு :-

  1. அமினுல்ஹூடா ஹசான் – கல்வி, மனித வளம், அறிவியம் மற்றும் தொழில்நுட்பக் குழு தலைவர்
  2. டாக்டர் ஜுல்கிப்ளி அஹ்மாட் – வீடமைப்பு, தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகக் குழு தலைவர்
  3. லியோ ச்சாய் துங் – சுற்றுலா, மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டுக் குழு தலைவர்
  4. ஜிம்மி புவா வீ த்ஷீ – அனைத்துலக வாணிபம், முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு குழு தலைவர்
  5. முகமட் கூஸான் அபு பாக்கார் – சுகாதாரம், கலாசாரம் மற்றும் பாரம்பரியக் குழு தலைவர்
  6. டாக்டர் எஸ் இராமகிருஷ்ணன் – ஒற்றுமை, உள்நாட்டு வர்த்தகம் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் குழு தலைவர்
  7. ஷேக் உமார் பஃகாரிப் அலி – இளைஞர், விளையாட்டு, தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுக் குழு தலைவர்
  8. தோஸ்ரின் ஜர்வந்தி – இஸ்லாமிய சமய விவகாரங்கள், வேளாண்மை மற்றும் கிராம மேம்பாட்டுக் குழு தலைவர்
  9. தான் செங் ச்சூன் – உள்ளூராட்சி, நகர்ப்புற நலன் மற்றும் சுற்றுச்சூழல் குழு தலைவர்
  10. முகமட் சோலிஹான் பட்ரி – பொதுப்பணி, போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்புக் குழு தலைவர்

இக்குழுவில், தோஸ்ரின், தான் மற்றும் முகமட் சோலிஹான் மூவரும் புதியவர்கள்.

இது வேலை செய்யும் நேரம்

இதற்கிடையே, ஜொகூரின் புதிய மந்திரி பெசார், டாக்டர் ஷாருட்டின் ஜமால், இது வேலை செய்யும் நேரம், அரசியல் செய்வதைக் குறைத்துகொண்டு பணியாற்றுங்கள் என புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்களுக்கு நினைவுறுத்தியுள்ளார்.

“மாநில நிர்வாகம் சுமூகமாக இயங்குவதை உறுதிப்படுத்த, ஆட்சிக்குழுவில் இடம்பெற்றுள்ள அனைவரும், சுயநலம் கருதாமல், மக்களின் நலன்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்,” என்று அவர் கேட்டுக்கொண்டார்.

“பொது மக்கள் நாம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என நம்புகின்றனர்.

“எனவே, மாநில மக்களின் சுபீட்சத்திற்காக, கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற நாம் முயற்சிப்போம்,” என இன்று, ஜொகூர் பாரு, கோத்த இஸ்கண்டாரில், தனது அலுவலகத்தில் பத்திரிக்கையாளர்களிடம் அவர் தெரிவித்தார்.