முன்னாள் செபராங் பிறை கவுன்சிலர் ஒருவர், மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம்(எம்ஏசிசி) பினாங்கு ஆர்டிடி ஊழலில் தொடர்புள்ள “பெரிய சுறாவை”ப் பிடிக்க வேண்டுமே தவிர “சிறிய நெற்றிலிகளுக்கு” வலைவீசிக் கொண்டிருக்கக் கூடாது என்றார்.
புக்கிட் தாம்புன் டிஏபி கிளைத் தலைவருமான தியோ சியாங் ஹூய், ஏப்ரல் 20 தொடங்கி இதுவரை எம்ஏசிசி பிடித்துவைத்துள்ள 52 ஆர்டிடி அமலாக்க அதிகாரிகளின் “தலை” யார் என்பதை அறிந்துகொள்ள விரும்பினார்.
52 ஆர்டிடி அமலாக்க அதிகாரிகளைப் பிடித்து பினாங்கு சாலைப் போக்குவரத்துத் துறையையே முடக்கிப் போட்டுள்ள எம்ஏசிசி-இன் செயலைப் பல தரப்பினரும் பாராட்டியுள்ளனர்.
“கைது செய்யப்பட்ட ஆர்டிடி அமலாக்க அதிகாரிகளின் எண்ணிக்கை 50-தைத் தாண்டிவிட்டதால் அடுத்து அவர்களுக்குப் பின்னே உள்ள சுறாவைத் தேடிச் செல்ல வேண்டும்”, என்று தியோ மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
“தங்களின் கீழ் அதிகாரிகள் இத்தனை பேர் , அதுவும் எம்ஏசிசி-இன் கணக்கின்படி பல ஆண்டுகளாக ஊழலில் ஈடுபட்டு வருவதை அத்துறைத் தலைவர்கள் அறியாதிருந்தது எப்படி?”, என்றவர் வினவினார்.
இதனிடையே, தேவை என்றால் விசாரணைக்கு உதவி செய்ய பினாங்கு ஆர்டிடி தலைவரும் மற்ற உயர் அதிகாரிகளும் அழைக்கப்படுவார்கள் என்று எம்ஏசிசி தெரிவித்திருப்பதாக பெர்னாமா செய்தி ஒன்று கூறிற்று.