மெட்ரிகுலேசன் வாய்ப்பு இன பேதமின்றி தகுதியுடைய அனைத்து மாணவர்களுக்கும் கிடைக்கப் பெற வேண்டும் – மலேசிய தமிழ்க் கல்வி ஒன்றியம்  கோரிக்கை

எந்த அரசு மாறினாலும், மாறாது தொடர்ந்து தொடர்கதையாகும் தமிழ் இந்திய மாணவர்களுக்கான மெட்ரிகுலேசன் உயர்கல்வி வாய்ப்பு இன பேதமின்றி தகுதியுடைய அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப் பட வேண்டும் என மலேசிய தமிழ்க் கல்வி ஒன்றியம் கோரிக்கை வைப்பதாக அதன் பொறுப்பாளர் திரு பாலமுருகன் வீராசாமி தெரிவித்தார்.

மலேசிய திருநாட்டின் குடிமக்களுக்கு பாரபட்சமின்றி அனைவருக்கும் சமமான தரமான கல்வி வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். அது நமது நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தில் அங்கிகரிக்கப்பட்ட ஒன்றாகும்.

கல்வி என்பது அனைவரின் உரிமை. அதை கொடுக்க வேண்டியது அரசின் கடமை. அதில் பாரபட்சம் பார்ப்பது மிகப்பெரிய மடமை. அதற்காக மாணவர்களை போராட வைத்து வஞ்சிப்பது மாபெரும் கொடுமை என்றார் திரு. பாலமுருகன்.

எனவே உயர்கல்வி வாய்ப்புகள் இன பேதமின்றி தகுதி அடிப்படையில் வழங்குவதே நாட்டின் கல்வி வளர்ச்சி மேன்மைக்கு சிறப்பானதாகும். அதுவே மூவின மக்களுக்கும் கொடுக்கப்படும் சமத்துவமாகும் என்றார்.

ஆனால் இன்றோ மிகச் சிறந்த மதிப்பெண்கள் பெற்றும் நமது பிள்ளைகளுக்கு பெரும்பாலும் வாய்ப்பு கிடைக்காமலும், கிடைக்கப் பெற்ற மாணவர்கள் விண்ணப்பித்த துறை நிராகரிக்கப்பட்டு, படித்த துறைக்கு தொடர்பே இல்லாத துறையாக இருப்பதும் வாடிக்கையான போராட்டங்களாகவே இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற நமது விவகாரங்களை கண்காணிக்க  துணை கல்வி அமைச்சர் பதவி தமிழருக்கு வாய்ப்பு வழங்காததும், தமிழ்ப் பள்ளியை கண்காணிக்க சீனர் இன அமைச்சரை நியமித்து நம்மை அவமானப்படுத்துவதும் மற்றும் தமிழ் வழி கல்விக்கு கேடு விளைவிக்கும் திட்டங்களை அரங்கேற்றி வருவதும் வேதனையின் உச்சம் என்றார்.

ஆகவே ஆளுங்கட்சி எதிர்கட்சி என இருதரப்பும் கல்வியை வைத்து அரசியல் நடத்தாமல், அனைவரின் கல்வி உரிமைக்காக நிரந்தர சட்டத் தீர்வை கொண்டு வர வேண்டும் என்பதே தற்போதைய தேவை. பி40 உட்பட தகுதியுடைய எவ்வின மாணவர்களுக்கும் பாகுபாடின்றி உயர்கல்வி வாய்ப்புகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டுமென கல்வி அமைச்சுக்கு மலேசிய தமிழ்க் கல்வி ஒன்றியம் கோரிக்கை வைப்பதாக அதன் பொறுப்பாளர் திரு பாலமுருகன் வீராசாமி கேட்டு கொண்டார்.