சண்டகான் இடைத் தேர்தலில் ஐந்து-முனைப் போட்டி

சண்டகான் இடைத் தேர்தலில் ஐவர் களமிறங்குவார்கள் என்று தேர்தல் ஆணையம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

டிஏபி-இன் விவியான் வொங், பார்டி பெர்சத்து சாபா(பிபிஎஸ்)-வின் லிண்டா ட்சென் ஆகியோருடன் மூன்று சுயேச்சை வேட்பாளர்களும் வேட்பு மனு தாக்கல் செய்திருப்பதைத் தேர்தல் அதிகாரி முகம்மட் ஹம்சான் ஆவாங் சுபாய்ன் உறுதிப்படுத்தினார்.

ஹம்சா அப்துல்லா, சியா சியு யொங், சுலைமான் அப்துல் சமட் ஆகியோரே அம்மூன்று சுயேச்சை வேட்பாளர்கள்.

சண்டகான் எம்பி ஸ்டீபன் வொங் மார்ச் 28-இல் காலமானதை அடுத்து இந்த இடைத் தேர்தல் நடைபெறுகிறது.

இந்த இடைத் தேர்தலில் டிஏபி வேட்பாளரான விவியான்,30, காலஞ்சென்ற ஸ்டீபனின் ஆகக் கடைசி மகளாவார்.

பிபிஎஸ் வேட்பாளரான ட்சென், பத்து சாபியின் முன்னாள் எம்பி ஆவார்.

65வயது ஹம்சா, சாபா அமனா மற்றும் பாஸ் கட்சியின் முன்னாள் தலைவர். இவர் 14வது பொதுத் தேர்தலில் பத்து சாபி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டுத் தோற்றவர்.

சியா, அரசியலுக்குப் புதியவர்.

சுலைமான்,36, ஸ்டீபன் யொங்கிடம் உதவியாளராக இருந்தவர்.

சண்டகானில் வாக்களிப்பு நாள் மே 11.

அந்த நாடாளுமன்றத் தொகுதி 39,777 வாக்காளர்களைக் கொண்டுள்ளது. அவர்களில் 51 விழுக்காட்டினர் சீனர்கள், 26 விழுக்காட்டினர் சாபா பூமிபுத்ராக்கள், 16விழுக்காட்டினர் மலாய்க்காரர்கள், 7விழுக்காட்டினர் மற்றவர்கள்.