மெட்ரிகுலேஷன்: மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது மட்டும் போதாது- கெராக்கான்

மெட்ரிகுலேஷன் கல்விக்கு அதிகமான மாணவர்களைச் சேர்ப்பது மட்டும் மாணவர் சேர்க்கை முறையை நியாயமாக்கி விடாது என கெராக்கான் கட்சித் தலைவர் டொமினிக் லாவ் கூறினார்.

90: 10 என்ற கோட்டா முறைக்குப் பதிலாக தகுதி அடிப்படையிலேயே மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும். குறைந்த-வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு மட்டும் கோட்டா முறையைக் கைக்கொள்ளலாம் என்று லாவ் கூறினார்.

“பல்கலைக்கழக நுழைவுக்கான ஒரே தேர்வாக எஸ்டிபிஎம்-மைப் பயன்படுத்துவது பற்றியும் அரசாங்கம் ஆலோசிக்கலாம்.

“மெட்ரிகுலேஷன் சேர்க்கையில் மாற்றங்கள் செய்யப்பட்டு மாணவர்கள் நியாயமாகவும் சமமாகவும் நடத்தப்படுவதைக் காணவே மக்கள் விரும்புகிறார்கள்.

“மாணவர் எண்ணிக்கையை அதிகரித்து கோட்டா முறையை அப்படியே வைத்துக்கொள்வது பக்கத்தான் ஹரப்பான் பெருமைப்படத்தக்க ஒரு தீர்வாகி விடாது”, என லாவ் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.