புதிய சிஜே குறித்து ஆட்சியாளர்கள் இவ்வாரம் முடிவு செய்வார்கள் எனப் பிரதமர் எதிர்பார்க்கிறார்

நாட்டின் புதிய தலைமை நீதிபதி(சிஜே) குறித்து ஆட்சியாளர் மன்றம் இவ்வாரம் முடிவு செய்து விடும் எனப் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் நம்புகிறார்.

“ஆட்சியாளர்களின் அங்கீகாரத்துக்காகக் காத்திருக்கிறோம். இவ்வாரத்துக்குள் அது கிடைக்கும் என்று நினைக்கிறேன்”, என மகாதிர் புத்ரா ஜெயாவில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ரிச்சர்ட் மலஞ்சோம் பணி ஓய்வு பெற்றதை அடுத்து ஏப்ரல் 12-இலிருந்து தலைமை நீதிபதி பதவி நிரப்பப்படாமல் இருக்கிறது.

இதற்குமுன், பிரதமர், அவ்விவகாரத்தை ஆட்சியாளர் மன்றம் இன்னமும் பரிசீலித்துக் கொண்டிருப்பதாகக் கூறியிருந்தார்.

ஆனால், சிங்கப்பூர் ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ் செய்தி ஒன்று, தலைமை நீதிபதி நியமன விசயத்தில் புத்ரா ஜெயாவுக்கும் அரண்மனைக்குமிடையில் இழுபறி நிலவுவதாகக் கூறிற்று.

நீதிபதிகள் நியமன மன்றம் சிஜே பதவிக்கு மூன்று பெயர்களை ஆட்சியாளர் மன்றத்திடம் பரிந்திரைத்திருப்பதாக தெரிகிறது.