“எல்லா மலேசியர்களுக்கும் தொழிலாளர் தின நல் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். மலேசியா போன்ற ஒரு பல இன நாட்டில் சுதந்திரத் தினத்துக்கு அடுத்து எல்லா இன மக்களும் ஒன்றுபட்டு கொண்டாட வேண்டிய ஒரு உன்னத நாள் இருக்கிறது என்றால் அது தொழிலாளர் தினமேயாகும்”. என்கிறார் நீர், நிலம் இயற்கை வள அமைச்சருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார்
ஐரோப்பாவில் தொழில் புரட்ச்சி யுகம் தொடங்கிய பின் மனிதர்களை – மனிதர்கள் (முதலாளிகள்) மிருகங்களைப் போன்று நடத்த முற்பட்டனர். அதனால், அந்தக் கொடுமையிலிருந்து சகா மனிதர்களை, மனித மாண்பினைக் காக்க உழைப்பாளிகளுக்காக ஒன்றுகூடிக் குரல் எழுப்பினர்கள்.
உழைப்பவர்களுக்கும் குடும்பம் ஆசை, பாசங்கள் உண்டு, சுகத் துக்கங்கள் உண்டு, வேலை நேரத்துக்குப்பின் தொழிலாளர்களுக்கும் எட்டு மணி நேரப் பொழுது போக்கும், எட்டு மணி நேரத் தூக்கமும், அவசியம் உழைக்கும் மக்கள் ஒவ்வொரு நாளையும் மூன்றாகப் பிரித்து வாழ வேண்டும் எனப் போராடிய மனிதநேயப் போராட்டங்களுக்குக் கிடைத்த வெற்றியையே நாம் இன்று தொழிலாளர் தினமாகக் கொண்டாடுகிறோம்.
அன்னிய ஆட்சி காலத்தில் மேற்கு நாடுகளில் அறிமுகமான தொழிலாளர் உரிமைகளை இந்நாட்டிலும் அறிமுகப்படுத்த, அமல் படுத்த தனது இன் உயிரைக் கொடுத்துப் போராடிய மலாயா கணபதி, சுதந்திரத்துக்குப் பின், நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் வீ.டேவிட் போன்ற பல தொழிற்சங்கவாதிகளை கண்டிப்பாக நாம் நினைவு கூற வேண்டும்.
இன்று இந் நாட்டில் மலேசிய தொழிலாளர்கள் அனுபவிக்கும் எல்லா மேம்பாடுகளுக்கும், வேலை நேரம் தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் உரிமைக்கும், அரும் பாடுபட்டவர்கள் அவர்கள் என்றால் மிகையாகாது என்றார் கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவரும், கோலலங்காட் நாடாளுமன்ற உறுப்பினரும், நீர், நிலம் இயற்கை வள அமைச்சருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.
தொழிலாளர்களுக்கான வாழ்வாதார அடிப்படையை பூர்த்தி செய்யும் வருமானம் அற்ற சூழல் பற்றி பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளை அது மறக்கவில்லை, தொழிலாளர்களின் மேம்பாடு நாட்டின் மேம்பாடாகும். ஆனால், எதிர்மறையான விளைவுகளைத் தவிர்க நாட்டில் படிப்படியான ஊதிய உயர்வினை வழங்க இந்த அரசு தொடர்ந்து பாடுபடும் என்றார், கோலலங்காட் நாடாளுமன்ற உறுப்பினரும், நீர், நிலம் இயற்கை வள அமைச்சருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.