அரசாங்கம் முஸ்லிம்களின் நலன்களைக் காக்கத் தவறிவிட்டதாகக் கூறிக்கொண்டிருக்கும் பெர்லிஸ் முப்தி முகம்மட் அஸ்ரி சைனல் அபிடினை முன்னாள் இராணுவ மற்றும் போலீஸ் படைவீரர் சங்கம், பெட்ரியோட், சாடியுள்ளது.
அஸ்ரி மக்களுக்காக பேசும் தகுதியை இழந்து விட்டதாக பெட்ரியோட் தலைவர் முகம்மட் அர்ஷாட் ராஜி கூறினார்.
“நாட்டை மிகப் பெரிய ஊழல்கள் நாறடித்துக் கொண்டிருந்தபோது (முன்னாள் பிரதமர்) நஜிப் அப்துல் ரசாக்குக்கும் முந்தைய அரசாங்கத்தின் உயர் தலைவர்களுக்கும் எதிராக வாய் திறக்காத அஸ்ரி அவரது நம்பகத்தன்மையை இழந்து விட்டார்.
“இப்போது மக்களுக்காக பேசும் தகுதி அவருக்கு இல்லை”, என அர்ஷாட் ஓர் அறிக்கையில் கூறினார்.
அஸ்ரி, திங்கள்கிழமை இந்து சமயத்தை இழிவுபடுத்திப் பேசியதாகக் கூறப்படும் இஸ்லாமிய சமய விரிவுரையாளர் முகம்மட் ஸம்ரி வினோத் காளிமுத்து கைது செய்யப்பட்டதைக் குறை கூறியிருந்தார்.
நேற்று, அந்த முப்தி அவருடைய முகநூல் பக்கத்தில் ஒரு கருத்தைப் பதிவிட்டிருந்தார். பக்கத்தான் ஹரப்பான் ஆட்சியில் இஸ்லாம் மருட்டலுக்கு இலக்காகியிருப்பதாக பலரும் கருதுகிறார்களாம்.