2020-இல் ஊராட்சித் தேர்தல் வரலாம்

வீடமைப்பு, ஊராட்சி அமைச்சு பல்வேறு சட்டங்களில் திருத்தம் செய்து 2020 இறுதிக்குள் ஊராட்சித் தேர்தல்களைக் கொண்டுவரத் திட்டமிடுவதாக அதன் அமைச்சர் சுரைடா கமருடின் கூறினார்.

அதற்காக 1976 ஊராட்சிமன்றச் சட்டத்தையும் மற்ற சட்டங்களையும் திருத்த வேண்டியிருக்கும் என்றாரவர். சுரைடா, 2018 மே மாதம், ஊராட்சிமன்றத்துக்கான தேர்தல்கள் மூன்றாண்டுகளில் கொண்டுவரப்படும் என்று வாக்குறுதி அளித்தது நினைவிருக்கலாம்.

“அடுத்த ஆண்டு இறுதிக்குள் அல்லது 2021 தொடக்கத்தில் ஊராட்சித் தேர்தல் தொடர்பான சட்டத்திருத்தங்களை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வேன்.

“எங்கள் திட்டம் நிறைவேறுகிறதா இல்லையா என்பது இரண்டாம் பட்சம்தான். ஆனால், சட்டத் திருத்தங்களைக் கொண்டு வருவது உறுதி”, என்றாரவர்.

குறிப்பிட்ட காலத்துக்கு முன்னதாகவே ஊராட்சிமன்றத் தேர்தல்களைக் கொண்டுவர முடியுமா என்பதை அவரால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை.

முதலில் இந்த விவகாரம் அமைச்சரவையின் முடிவைப் பொறுத்துள்ளது. ஆனால், அமைச்சரவை இன்னும் அதை விவாதிக்கவே தொடங்கவில்லை

“பல்வேறு நாடுகளின் ஊராட்சிமன்றத் தேர்தல்களை ஆராய்ந்து வருகிறோம். என்ஜிஓ-கள், மாநிலங்கள், மற்ற அமைப்புகள் ஆகியவற்றுடனும் கலந்துபேசி அவற்றின் கருத்துகளையும் பெற்று வருகிறோம்”, என்று சுரைடா கூறினார்.

இவற்றையெல்லாம் ஆராய்ந்து முடிவில் மலேசியாவுக்குப் பொருத்தமான ஒரு தேர்தல் முறை தேர்ந்தெடுக்கப்படும் என்றாரவர்.