கோலாலும்பூர் உயர் நீதிமன்றம் முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கு எதிரான 1எம்டிபி வழக்கு ஆகஸ்ட் 19 -க்கு ஒத்திவைக்கப்படுவதாக இன்று கூறியது.
அந்த வழக்கு மே14-இல் தொடங்குவதாக இருந்தது. ஆனால், இப்போது எஸ்ஆர்சி இண்டர்நேசனல் நிறுவன வழக்கு நடைபெற்றுக் கொண்டிருப்பதால் 1எம்டிபி வழக்கை வேறொரு நாளில் விசாரிக்க வேண்டுமாய் அரசுத் தரப்பு வைத்த விண்ணப்பத்தை ஏற்று அதை ஒத்தி வைப்பதாக உயர் நீதிமன்ற நீதிபதி கோலின் லாரன்ஸ் சிகுயிரா கூறினார்.
1எம்டிபி வழக்கு விசாரணைக்கான புதிய தேதி ஆகஸ்ட் 19. ஆகஸ்ட் 19இலிருந்து ஆகஸ்ட் 29வரையிலும் அதன் பின்னர் செப்டம்பர், அக்டோபர் மாதம் முழுக்கவும் நவம்பரில் முதலிரண்டு வாரங்களும் விசாரணை நடக்கும்.
“ஆகஸ்ட் 19-இல் வழக்கைத் தொடங்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஒத்திவைப்புக்கு ஒப்புக்கொள்கிறேன். எதிர்த்தரப்பு கேட்டுக்கொண்டதற்கிணங்க வெள்ளிக்கிழமைகளில் விசாரணை இருக்காது. வழக்கு நவம்பர் 14-இல் முடிவுக்கு வந்துவிட வேண்டும்”, என்று நீதிபதி கூறினார்.
இனிமேலும் ஒத்திவைப்பு கேட்டு யாரும் வரக்கூடாது என்றும் சிகுயிரா எச்சரித்தார்.
“இரண்டாவது தடவையாக வழக்கை ஒத்துவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது. மறுபடியும் ஒத்திவைப்பு கேட்டு வந்து விடாதீர்கள்”, என்றவர் கூறினார்.
1எம்டிபி மக்கள் ஆர்வத்துடன் கவனிக்கும் ஒரு வழக்கு என்பதால் அதை விசாரிப்பதற்காகக் கொலைவழக்கு போன்ற முக்கியமான வழக்குகளை எல்லாம் தள்ளி வைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.