இரண்டாண்டு ஒப்பந்தத்தில் ஹமிட் படோர் புதிய ஐஜிபியாக நியமனம்

அப்துல் ஹமிட் படோர் இரண்டாண்டுக்கால ஒப்பந்தத்தில் இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப் போலீசாக நியமிக்கப்பட்டார். அவருடைய பணிக்காலம் சனிக்கிழமை  தொடங்குகிறது.

அவரது நியமனத்துக்குப் பிரதமரின் ஆலோசனையின்பேரில் மாமன்னர் ஒப்புதல் தெரிவித்திருப்பதாக உள்துறை அமைச்சர் முகைதின் யாசின் ஓர் அறிக்கையில் கூறினார்.

அவரது ஒப்பந்தம் 2021, மே 3-இல் முடிவுக்கு வரும்.

ஹமிட் புக்கிட் அமானில் போலீஸ் சிறப்புப் படையின் துணைத் தலைவராக இருந்தவர். நஜிப் அப்துல் ரசாக் நிர்வாகத்தில் அவர் அப்பதவியிலிருந்து அகற்றப்பட்டு பிரதமர் துறைக்கு மாற்றப்பட்டார். ஆனால், ஹமிட் அப்பதவியை ஏற்கவில்லை. 1எம்டிபி ஊழல் பற்றி விசாரணை செய்ததற்காகத்தான் தம்மைப் பணிமாற்றம் செய்தார்கள் எனப் பகிரங்கமாக அறிவித்தார்.

கடந்த ஆண்டு பக்கத்தான் ஹரப்பான் ஆட்சிக்கு வந்ததும் அவர் சிறப்புப் படையின் இயக்குனராக மீண்டும் நியனிக்கப்பட்டார்.

மார்ச் மாதம் நூர் ரஷிட் இப்ராகிம் பணி ஓய்வு பெற்றதை அடுத்து ஹமிட் இடைக்கால துணை ஐஜிபி ஆக நியமிக்கப்பட்டார்.

மே 4ஆம் நாள் இப்போதைய ஐஜிபி முகம்மட் பூஸி ஹருன் பணி ஓய்வு பெறுகிறார். அவர் பணி ஓய்வு பெற்றதும் ஹமிட் புதிய ஐஜிபி-ஆக பொறுப்பேற்பார்.