நஜிப் செய்த தவற்றையே குவான் எங்கும் செய்துள்ளார்-பெர்சே சாடல்

சண்டாகான் இடைத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் வேட்பாளர் வெற்றி பெற்றால் அங்கு கார் நிறுத்தும் இடப் பிரச்னைக்குத் தீர்வு காணப்படும் என்று கூறிய நிதி அமைச்சர் லிம் குவான் எங்கைத் தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெர்சே சாடியது.

முன்னாள் பிரதமர் நஜிப்பும் இப்படித்தான் தேர்தல் வாக்குறுதிகள் கொடுப்பதை வழக்கமாக வைத்திருந்தார் என்று அது கூறிற்று.

“ஊடகச் செய்திகள் கூறுவது உண்மையாயின், இது 2010-இல் நஜிப் சிபு மற்றும் ஹுலு சிலாங்கூர் இடைத் தேர்தல்களின்போது ‘நீங்கள் எனக்கு உதவினால், நான் உங்களுக்கு உதவுவேன்’ என்று குறிப்பிட்டு சிபுவில் புதுப் பாலமும் ஹுலு சிலாங்கூரில் புதுப் பள்ளிக்க்கூடமும் கட்ட வேண்டுமானால் வாக்காளர்கள் பிஎன் வேட்பாளருக்கே வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தியதை நினைவுபடுத்துகிறது.

“உடனே அப்போதைய எதிர்க்கட்சிகள் அது ஒருவகைக் கையூட்டு என்று பரவலாகக் கண்டனம் தெரிவித்தன”, என பெர்சே இன்று ஓர் அறிக்கையில் கூறிற்று.

நிதி அமைச்சரான லிம் மக்களின் துன்பங்களைத் தீர்க்க உதவ வேண்டுமே தவிர வேட்பாளர் யார் எம்பி எந்தக் கட்சியைச் சேர்ந்தவர் என்பதையெல்லாம் பார்க்கக் கூடாது.

லிம் அப்படி ஒரு வாக்குறுதியைக் கொடுத்திருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என பெர்சே வலியுறுத்தியது.

லிம் சண்டாகான் டச்சஸ் அப் கெண்ட் மருத்துவமனையில் கார் நிறுத்தும் இடம் போதுமான அளவில் இல்லை என்றும் ஹரப்பான் வேட்பாளர் வெற்றிபெற்றல் அப்பிரச்னைக்குத் தீர்வு காணப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார் எனக் கூறப்பட்டிருந்தது.