சர்ச்சைக்குரிய சமய விரிவுரையாளர் ஜாகீர் நாய்க்மீது இந்தியாவில் பணச் சலவைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருப்பதாக பிபிசி அறிவித்துள்ளது. (கருப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றுவதே பணச் சலவையாகும்).
அவர் யுஎஸ்$ 28 மில்லியனை(ரிம116 மில்லியன்)ச் சட்டவிரோதமான முறையில் பெற்றாராம்.
அத்துடன் அவர் வெறுப்பூட்டும் பேச்சுகளைப் பேசி வந்ததாகவும் பயங்கரவாதத்தைத் தூண்டி விட்டார் என்றும் இந்திய அதிகாரிகள் குற்றஞ்சாட்டினர்.
அவர்மீது இந்திய அமலாக்க இயக்ககம்(இடி) நேற்று மும்பாய் நீதிமன்றம் ஒன்றில் முறைப்படிக் குற்றம் சுமத்தியது என பிபிசி கூறியது.
“அவரது சினமூட்டும் பேச்சுகள் இந்தியாவில் முஸ்லிம் இளைஞர்களைச் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடவும் பயங்கரவாதச் செயல்களைச் செய்யவும் தூண்டி விட்டுள்ளன”, என அவ்வியக்ககம் நீதிமன்றத்தில் கூறிற்று.
ஜாகீர் அக்குற்றச்சாட்டுகளை மறுத்து தன் சொத்துக்கள் அனைத்தும் சட்டப்பூர்வமான வழிகளில் பெறப்பட்டவை என்கிறார்.
அந்த 53-வயது சமய விரிவிரையாளர் இப்போது மலேசியாவில் உள்ளார்.