இன்று வரலாற்றில் குறிப்பிட வேண்டிய நாளாகத் தமிழ்க்காப்பக அமைப்புநாள் அமைந்தது

இன்று வரலாற்றில் குறிப்பிட வேண்டிய நாளாகத் தமிழ்க்காப்பக அமைப்புநாள் அமைந்தது. மலேசியக் கல்வி அமைச்சின் அரசுப்படியான ஒப்புதலோடு முகாமையான அரசு அதிகாரிகளின் துணையோடும் அரசுசாரா அமைப்புகளின் துணையோடும் தமிழ்க் காப்பகம் அமைந்தது.

இவ்வமைப்பு விழாவை மலேசியக் கல்வி அமைச்சின் துணையமைச்சர் மாண்புமிகு தியோ நீ சின் அதிகாரப்படியாகத் தொடக்கி வைத்தார். சீன மொழிக் காப்பக அமைப்பின் துணைத்தலைவரும் சிறப்பு வருகையளித்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டார். அமைச்சர் சிவராசாவும் , சபாய் சட்டமன்ற உறுப்பினர் தமிழச்சி காமாட்சியும் சிறப்பு வருகையளித்தனர். மலேசியாவின் பினாங்கு மாநில காவல் துறை முன்னாள் தலைவர் இடத்தோ சிறி தெய்வீகன் இக்காப்பத்தின் துணைத்தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார். மலேசியத் தமிழ் உணர்வாளர்களின் நீண்டநாள் கனவு இன்று கல்வி அமைச்சின் ஒப்புதலோடு நிறைவேறியது.

தமிழ்க்காப்பகத்தின் முதன்மைப்பணியாகத் தமிழ்க் கலைச்சொல்லாக்கம் அமைந்துள்ளது. தமிழ் மொழிப்பெயர்ப்பு , தமிழிய நூல்கள், பதிப்புத் துறைகளும் இதன் பணிக்கூறுகளாக அமைந்துள்ளன. தமிழ்க்காப்பகத்தின் தலையாயப் பணிகள் அதன் திட்டவரைவுக்கேற்ப படிப்படியாக நிறைவேறும்…பெருந்தகையாளர்கள் மருத்துவர் செல்வம், விரிவுரைஞர் நாராயணசாமி, விரிவுரைஞர் இனியனார், விரிவுரைஞர் மன்னர்மன்னன், தமிழறிஞர் திருச்செல்வனார், முருகையனார், தேர்வு வாரியத்தின் மேனாள் அதிகாரி மூர்த்தி, இடத்தோ சோதிநாதன், தேசியக் கல்வி மன்ற ஏடலர் இடத்தோ இராமநாதன், விரிவுரைஞர் இளந்தமிழ், தமிழாசிரியர் இலக்கியகத் தலைவர் ஆசிரியர் இராசன், மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர் மன்றத் தலைவர் அருச்சுனன் , உப்சி பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் மனோன்மணி முதலான முகாமையர் பலரும் இவ்வமைப்பு விழாவில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. இவ்வமைப்பாக்கச் செயற்பாட்டுக்கு முதுகெலும்பாக விளங்கிய பெருமகன் முனைவர் குமரவேலு அவர்கள் என்றால் அது மிகையாகாது. பலர் எண்ணினர், பேசினர் முனைவர் குமரவேலு அனைவரையும் ஒருங்கிணைத்து செயல் செய்து காட்டினார்… அதுவும் நாட்டின் தேவான் பகாசா டான் புசுத்தாக்கா என்னும் மொழி நூல் மன்றத்தில் கல்வி அமைச்சின் ஒப்புதலோடு செய்தது செயற்கரிய செயலாகும்…