இந்து சமயத்தை அவமதித்ததற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்ட முகம்மட் ஜம்ரி வினோத் காளிமுத்து அப்படிப்பட்ட குற்றமெதனையும் தான் செய்யவில்லை என மறுக்கிறார்.
“நான் அவமதித்ததாக பலரும் குற்றஞ்சாட்டுகிறார்கள். ஆனால், அவர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ளவில்லை. யாரெல்லாம் என்னைக் குற்றம் சாட்டுகிறார்களோ அவர்கள்தான் உண்மையில் அவமதிக்கிறார்கள்.
“பொறுப்பற்ற கும்பல்களான இஸ்லாத்தின் எதிர்ப்பாளர்களும் மலாய்க்காரர்- எதிர்ப்பாளர்களும் விவகாரத்தைப் பெரிதுபடுத்தி விட்டனர். முடிவில் நான் பலிகடா ஆனேன்”, என்றவர் ஓர் அறிக்கையில் கூறினார்.
கைது செய்தாலும் தன்னிடம் நல்லவிதமாக நடந்துகொண்ட போலீசாருக்கு- அவர்களில் சிலர் இந்துக்கள்- அவர் நன்றி தெரிவித்தார்.
ஆனாலும் இந்து சமயத்தைப் பழித்துரைக்கும் நோக்கம் சிறிதுமில்லை என்ற நிலையிலும் தான் மூன்று நாள் தடுத்து வைக்கப்பட்டது மிகவும் ஏமாற்றமளிக்கிறது என்றார்.
பக்கத்தான் ஹரப்பான் அமைச்சர்கள் பி.வேதமூர்த்தி, எம்.குலசேகரன், பினாங்கு துணை முதல்வர் பி.இராமசாமி போன்றோர் இஸ்லாத்தையும் மலாய்க்காரர்களையும் இகழ்ந்து பேசியிருக்கிறார்கள், ஆனால் நடவடிக்கை எடுக்கப்பட்டதில்லை என்றவர் சொன்னார்.
“ஆயிரக்கணக்கான போலீஸ் புகார்கள் இருந்தாலும் ஒருத்தர்கூட கைது செய்யப்பட்டதில்லை”, என்றார்.
முகம்மட் ஜம்ரி, கிளந்தானில் அவர் ஆற்றிய சமய உரைக்காக நிறைய போலீஸ் புகார்கள் செய்யப்பட்டதை அடுத்து கைது செய்யப்பட்டார்.
இந்து சமயம் பல தெய்வ வழிபாட்டையும் உருவ வழிபாட்டையும் கொண்டிருப்பதால் தான் மதமாறியதாக அவர் அவ்வுரையில் குறிப்பிட்டிருந்தார்.