ஆர்டிஎஸ் திட்டத்துக்குத் தேவையான நிலத்தை இலவசமாகவே கொடுக்க முன்வந்தார் ஜோகூர் ஆட்சியாளர்

ஜோகூர் ஆட்சியாளர் சுல்தான் இஸ்கண்டார், புக்கிட் சாகாரில் தமக்குச் சொந்தமான நிலமொன்று உத்தேச ஜோகூர் பாரு-சிங்கப்பூர் விரைவு இரயில் திட்டத்துக்குத் (ஆர்சிஎஸ்) தேவைப்படுவது தமக்குத் தெரியாது என்றார்.

அந்த நிலத்துக்கு இழப்பீடு கொடுக்க வேண்டியிருப்பதால் ஆர்டிஎஸ் திட்டச் செலவு உயர்ந்து விட்டதாகக் கூறப்படுவதைக் கேட்டு சுல்தான் வருத்தமடைந்ததாகவும் நிலத்தை இலவசமாகவே கொடுக்க அவர் விரும்புவதாகவும் அவரின் தனிச் செயலர் ஜாபா முகம்மட் நோவா கூறினார்.

“ஆர்டிஎஸ் திட்டத்துக்கு சுல்தானுக்குச் சொந்தமான நிலமும் தேவைப்படுவது குறித்து இதுவரை அவருக்குத் தெரியாது.

“புக்கிட் சாகாரில் உள்ள சுல்தானுக்குச் சொந்தமான நிலம் ஆர்சிஎஸ் திட்டத்துக்கு உண்மையிலேயே தேவையென்றால் நிலத்தை இலவசமாகவே அரசாங்கத்திடம் ஒப்படைக்க சுல்தான் சம்மதிக்கிறார்”, என்றாரவர்.

ஆனால், ஒரு நிபந்தனை. ஆர்டிஎஸ் திட்டத்தை உடனடியாகத் தொடங்க வேண்டும். ஏனென்றால், மக்கள் இரு நாடுகளுக்குமிடையில் போகவர மிகவும் இடர்படுவதை சுல்தான் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார் என்று ஜாபா கூறினார்.

சுல்தான் எப்போதுமே மக்களின் நலனுக்கும் அரசாங்கத்தின் நலனுக்கும் முன்னுரிமை அளிப்பவர் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.