நாட்டில், தற்போது இஸ்லாத்தின் நிலை மோசமாக உள்ளது எனும் பெர்லிஸ் முஃப்தியின் கருத்தோடு, பேராக் முஃப்தி ஹருஸ்சானி ஜக்காரியா ஒத்துபோகவில்லை.
அரசாங்கம் மாறினாலும், மலேசியாவில் இஸ்லாம் மதத்தின் நிலை பாதுகாப்பாகவே உள்ளது என்றார் அவர்.
“புதிய அரசாங்கத்தின் கீழ், இஸ்லாம் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக எனக்குத் தோன்றவில்லை. ஆனால், இஸ்லாத்தை இன்னும் விரிவாக்கம் செய்ய வேண்டும், குறிப்பாக, கல்வித் துறையில்,” என ஹருஸ்சானி தெரிவித்தார்.
கடந்த ஏப்ரல் 29-ல், முஸ்லிம் அரசு சார்பற்ற செயல்பாட்டாளரான முஹம்மது ஸம்ரி வினோத் காலிமுத்துவைக் கைது செய்தது குறித்து, பெர்லிஸ் முஃப்தி அஸ்ரி அதிருப்தி தெரிவித்தார்.
“இன்றைய அரசாங்கத்தை வழிநடத்துபவர்களில், இஸ்லாத்தைப் பாதுகாப்பதற்கான குரல்கள் மிகக் கடினமாகவே கேட்கிறது, அதுவும் சிறிய அளவில்.
“இது நியாயமில்லை. பிஎச் அரசாங்கத்தில், இஸ்லாம் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக மக்கள் உணர்கின்றனர்,” என்றார் அஸ்ரி.
இதற்கிடையே, இந்து மதத்திற்கு எதிராக அவதூறு பரப்பி வரும் ஸம்ரி விநோத் பற்றி ஹருஸ்சானி கருத்து தெரிவித்தார்.
“பிற மதங்களை அவமதித்து பேச நமக்கு அனுமதி இல்லை, அது தவறான செயல். நாம் அவ்வாறு செய்தால், பிற மதத்தவரும் நம் மதத்தைத் தூற்றி பேசவர். இது நம்மிடையே பிளவை ஏற்படுத்தும்.
“இஸ்லாத்தைப் பரப்புவதில், பிற மதங்களை தூற்றி பேச நபி நம்மை அனுமதிக்கவில்லை,” என்றார் அவர்.