கடந்த ஆண்டு மசீச அதன் ஆண்டுக் கூட்டத்தை இரகசியமாக நடத்தியபோது லிம் கிட் சியாங் அதைச் சிறுமைப்படுத்திப் பேசியதை வீ கா சியோங் இன்று நினைவு கூர்ந்தார்.
1எம்டிபி ஊழலில் முன்னாள் பிரதமரைத் தற்காத்துப் பேசிய கட்சித் தலைமையை உறுப்பினர்கள் ஆண்டுக் கூட்டத்தில் பிய்த்தெடுத்து விடுவார்கள் என்று அஞ்சியே மசீச அதன் கூட்டத்தை இரகசியமாக நடத்துகிறது என்று கதை கட்டிவிடப்பட்டது என்று வீ கூறினார்.
லிம் அன்று விடுத்த அறிக்கையில், “1எம்டிபி ஊழலில் நஜிப்புக்கு உதவியாகவும் உடந்தையாகவும் இருந்த வீயையும் மசீச தலைமையையும் பேராளர்கள் தாக்கிப் பேசுவது வெளியில் தெரியக்கூடாது என்பதற்காகத்தான் இன்றைய மசீச ஆண்டுக் கூட்டம் இரகசியமாக நடத்தப்படுகிறதா?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இன்று வீ முக நூல் பதிவு ஒன்றில் , அன்று மசீச செய்ததைத்தானே இன்று டிஏபியும் செய்துள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்.
“நேற்றைய டிஏபி தேசிய மாநாட்டில், ஊடகங்கள் அனுமதிக்கப்படாமால் பேராளர்களின் வாதங்கள் இரகசியமாகவே நடத்தப்பட்டன. முன்பு இப்படி நடந்தது இல்லை”, என்றாரவர்.
டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், பேராளர்கள் கொள்கைகள் பற்றி மனம்திறந்து பேசுவதற்கு இடமளிக்கும் வகையில்தான் கூட்டம் நான்கு-சுவர்களுக்குள் நடத்தப்பட்டது என்று செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார்.
“இப்போது நாங்கள் அரசாங்கத்தில் இருக்கிறோம். கொள்கைகள் வகுப்பதற்குத் தேவையான முக்கிய விவகாரங்களைப் பேச வேண்டியுள்ளது. அதை இரகசியமாக நடத்துவதுதான் நல்லது”, என நிதி அமைச்சர் சொன்னார்.
விவாதங்கள் ஊடகங்கள் வழி வெளியில் தெரிந்துவிடும் என்ற அச்சமின்றிப் பேராளர்கள் மனந்திறந்து பேசுவதற்கு இடமளிக்கத்தான் அது இரகசியமாக நடத்தப்பட்டது என்று டிஏபி வட்டாரங்களும் மலேசியாகினியிடம் தெரிவித்தன.
முன்பு துணிச்சலாக பேசிவந்த டிஏபி தலைவர்கள் கடந்த பொதுத் தேர்தலுக்குப் பிறகு, முக்கியமான விவகாரங்களில் வாய்மூடிக் கொண்டிருப்பதை வைத்து டிஏபி இப்போது மசீசவைப் போல் ஆகிக் கொண்டிருக்கிறது என்று சில தரப்புகள் அடிக்கடிக் குற்றம் சாட்டுவதையும் பார்க்கிறோம்.
ஒரு வேடிக்கை என்னவென்றால், டிஏபி பல்லிழந்த புலி ஆகிவிட்டது என்றும் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் சொல்படி ஆடுகிறது என்றும் மசீச ஒரு பக்கம் குறைகூறிக்கொண்டிருக்கும் வேளையில் மறுபக்கம் அம்னோவும் பாஸும் டிஏபிதான் அரசாங்கத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு நினைத்ததை நடத்திக் கொண்டிருக்கிறது என்று குற்றம் சாட்டிக்கொண்டிருக்கின்றன.