சில அரசாங்கப் பணியாளர்கள் பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கத்துக்குக் குழிபறிக்க முனைவதாக பிரதமர் கூறியிருந்தாலும் அவரின் அணுக்கமான ஆலோசகர் ஒருவர் அரசாங்கம் அரசியலில் நீடித்திருக்க விரும்பினால் அது அரசுப் பணியாளர்களை நம்பித்தான் ஆக வேண்டும் என்கிறார்.
டயிம் சைனுடின், ஹாங்காங்கின் சவுத் சைனா மார்னிங் போஸ்ட் நாளிதழுக்கு அளித்த நேர்காணலில் அரசாங்கம் 1.6மில்லியன் அரசுப் பணியாளர்களுடன் இணைந்து பணியாற்றாது போனால் “அழிந்து” விடும் என்றார்.
“இப்போது நீங்கள் அரசாங்கத்தில் இருக்கிறீர்கள். திட்டங்களை நிறைவேற்றியாக வேண்டும். நீங்களே அதைச் செய்ய முடியாது. அரசுப் பணியாளர்கள்தான் அதைச் செய்ய வேண்டும்.
“நீங்கள் கொளகைகளைத் திட்டமிடுபவர்கள்தான். அரசுப் பணியாளர்கள்தான் அவற்றைச் செயல்படுத்துபவர்கள். அவர்களை நம்பாவிட்டால் அவர்கள் எதுவும் செய்ய மாட்டார்கள்”, என முன்னாள் பெருமக்கள் மன்றத்தின் தலைவர் அந்நேர்காணலில் குறிப்பிட்டார்.
அரசுப் பணியாளர்கள் 14வது பொதுத் தேர்தல்வரை ஒரு அரசாங்கத்துக்கு விசுவாசமாக இருந்தாலும் இப்போது யார் ஆட்சியில் இருக்கிறார்களோ அவர்களுக்குத்தான் அவர்கள் விசுவாசமாக இருப்பார்கள் என்றாரவர்.