ஜோகூர் பட்டத்திளவரசர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிம் ஒரு இளைஞர், பல்வேறு விவகாரங்களிலும் தன் கருத்தை வெளியிட விரும்புகிறவர் என முன்னாள் சட்ட அமைச்சர் சைட்
இப்ராகிம் கூறினார்.
இளவரசரின் கருத்துகள் சில தவறானவையாக இருக்கலாம், ஏறுமாறானவையாகக் கூட இருக்கலாம், ஆனால் அவற்றால் நாட்டுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்றாரவர்.
“அப்படி இருக்க அவரையும் அவரின் குடும்பத்தையும் அவமதிக்க வேண்டிய அவசியம் என்ன?”, என்று சைட் டிவிட் செய்திருந்தார்.
தெருச் சண்டையிலும் சாக்கடை அரசியலிலும் கைதேர்ந்த அரசியல்வாதிகள் அந்த வித்தையை அவர்களின் அரசியல் வைரிகளிடம் மட்டுமே காண்பிக்க வேண்டும்.
“அரசக் குடும்பங்களிடம் காண்பிக்கக் கூடாது”, என்றாரவர்.
இதற்கு முன்னதாக டிவிட்டரில் இட்டிருந்த ஒரு பதிவில் சைட், நடப்பு நிலவரத்தைப் நஜிப் பிரதமராக இருந்த காலத்துடன் ஒப்பிட்டார்.
“நஜிப் 1எம்டிபி-யை வைத்து நினைத்ததை நடத்திக் கொண்டிருந்தபோது அவரின் அமைச்சர்கள் வாயை மூடிக்கொண்டு இருந்தார்கள். அன்று அதைக் குத்திக்காட்டிக் கேலி செய்தது பக்கத்தான் ஹரப்பான்.
“இப்போது பிரதமர் ஜோகூர் சுல்தான் குடும்பத்தைப் போட்டுத் தாக்குகிறார். அவரின் அமைச்சர்கள் வாயைப் பொத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கும் இவர்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லை”, என்றார்.
துங்கு இஸ்மாயிலைப் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கடுமையாக சாடியது குறித்து சைட் இவ்வாறு கருத்துரைத்திருந்தார்.
நேற்று ஊடகங்களுடனான நேர்காணல் ஒன்றில் மகாதிர், இளவரசரை “அறியாப் பிள்ளை”, “சிறு பிள்ளை” என்று குறிப்பிட்டிருந்தார்.

























