இராகவன் கருப்பையா – அண்மையில் நடந்து முடிந்த சபா மாநில சட்டமன்றத் தேர்தலில் ஜ.செ.க. அடைந்த படுதோல்வியானது அக்கட்சியின் தலைமைத்துவத்திற்கு வேண்டுமானால் அதிர்ச்சியாக இருக்கலாம்.
ஆனால் பொது மக்கள், குறிப்பாக சபா மாநில வாக்காளர்கள், தாங்கள் வெகுளியானவர்களோ ஏமாளிகளோ அல்ல என மிகத் தெளிவாக, துணிச்சலாக சுட்டிக் காட்டியுள்ளனர் என்பதுதான் உண்மை.
“பொறுத்தது போதும். இனி பொங்கி எழவேண்டும்,” என்றெண்ணி, ‘பளார், பளார்’ என இரு கண்ணங்களிலும் ஓங்கி அறைந்தாற் போல ஜ.செ.க.விற்கு அவர்கள் செம்மையான பாடம் கற்பித்துள்ளனர். இது அனைவரும் எதிர்பார்த்த ஒன்றுதான்.
ஆற்ற வேண்டியக் கடமைகளை புறம் தள்ளி, பதவி சுகங்களில் மிதந்து கொண்டிருந்த அக்கட்சியினருக்கு இப்போதுதான் ஞானம் பிறந்துள்ளதைப் போல அதன் தலைவர்கள் துடித்து எழத் தொடங்கிவிட்டனர்.
பக்காத்தான் அரசாங்கம் ஆட்சியைக் கைப்பற்றி 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள போதிலும் மக்களுக்கு வழங்கப்பட்ட எண்ணற்ற வாக்குறுதிகள் இன்னமும் நிறைவேற்றப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன.குறிப்பாக பல துறைகளிலும் நிலைகளிலும் செய்ய வேண்டிய சீர்திருத்தங்களை பிரதமர் அன்வார்தான் கண்டும் காணாததைப் போல இருக்கிறார் என்றால் ஜ.செ.க.வினரும் அவற்றில் கவனம் செலுத்தியதாகத் தெரியவில்லை.
இப்போது தீடீரென மக்களுக்குத் தேவையான பல விஷயங்கள் குறித்து அவர்கள் பேசி வருவதும் அன்வாருக்கு தெருக்குதல் கொடுக்கத் தொடங்கியுள்ளதும் நமக்கு வியப்பாத்தான் உள்ளது.
கடந்த சுமார் 20 ஆண்டுகளில், முதல் முறையாக சபா மாநில சட்டமன்றத்தில் ஒரு ஜ.செ.க. உறுப்பினர் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இச்சூழல் அக்கட்சியின் தலைமைத்துவத்தை சற்று ஆட்டம் காணச் செய்துள்ளது என்பதை நம்மால் காண முடிகிறது.
அரசாங்கத்தில் எதிர்கட்சியாக இருந்த காலத்தில் அக்கட்சியினரின் கர்ஜனைகளுக்கு அளவே இருக்காது. இப்படிப்பட்ட அரசியல் தலைவர்கள்தான் நாட்டிற்குக் தேவை என்று எண்ணும் அளவுக்கு அவ்வளவு சிறப்பாக இருக்கும்.
ஆட்சிக்கு வந்த பிறகு அதே மாதிரி பேச முடியாது என்பதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். ஆளும் தரப்பில் இருக்கும் போது அதற்கு ஒரு வரையறை உண்டு என்பது நமக்குத் தெரியாமல் இல்லை.எனினும் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியாதா என்ன? ஆளும் தரப்பில் இருக்கும் ஆணவத்தில் அவற்றை உதாசினப்படுத்தலாமா?
குட்டை பாவாடை அல்லது அரைக்கால் சிலுவார் அணிந்திருப்போர் காவல் நிலையம், மருத்துவமனை மற்றும் குடிநுழைவு இலாகா போன்ற பல அரசாங்க அலுவலகங்களில் நுழைய அனுமதி மறுக்கப்படுவது புதுப் பிரச்சனை ஒன்றும் இல்லை.
கடந்த பல ஆண்டுகளாகவே, இல்லாத ஒரு சட்ட விதியை அவரவர் இஷ்டம் போல அமுல் செய்து பொதுமக்களுக்கு சிரமத்தைக் கொடுத்து வருகின்றனர் பல அரசாங்க அதிகாரிகள்.
இது இப்போதுதான் தமக்கு தெரிய வந்துள்ளதைப் போல உக்கிரக் குரல் எழுப்பி ஒரு ‘டிராமா’ போட்டுக் கொண்டிருக்கிறார் ஜ.செ.க. தலைவர் கோபிந் சிங்.
இன்னமும் நிறைவேற்றப்படாத பல விஷயங்கள் குறித்து பிரதமரிடம் பேசவிருப்பதாக அக்கட்சியின் ஆலோசகர் லிம் குவான் எங் திடீரென வீறுகொண்டு எழுந்துள்ளார். இதனை உணருவதற்கு 3 ஆண்டுகள் ஆனதுதான் நமக்கு வேடிக்கையாக உள்ளது.
பல ஆண்டுகளாக இழுபறியாக உள்ள ஒரு விவகாரம் யு.இ.சி.(UEC) எனப்படும் சீனக் கல்விச் சான்றிதழுக்கான அங்கீகாரம். தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியை மறந்து அதற்கும் இன்னமும் தீர்வு காணப்படவில்லை. இப்போதுதான் அதைப் பற்றி பிரதமரிடம் பேசப் போவதாகக் கூறுகிறார் கட்சியின் துணைத் தலைவர் ஙா கோர் மிங்.
எனினும் நாட்டின் கல்விக் கொள்கைக்கு எதிராக எதையும் செய்ய முடியாது என அன்வார் திட்டவட்டமாக அறிவித்துவிட்ட நிலையில் இவ்விவகாரம் இன்னமும் ஒரு இடியப்ப சிக்கலாகத்தான் உள்ளது.
இத்தகையச் சூழலில் ஜ.செ.க. செயலாளர் எந்தனி லோக் சற்றுத் தடுமாற்றமாகத்தான் காணப்படுகிறார். ஏனெனில் சினக் கல்விக்குத் தேவையான சலுகைகளை பெறத் தவறினால் அக்கட்சிக்கான சீன சமூகத்தின் ஆதரவு பெருமளவு சரியும் என்று அவருக்கு நன்றாகவேத் தெரியும்.
அடுத்த பொதுத் தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் மட்டுமே இருக்கும் பட்சத்தில், இந்த குறுகிய காலத்தில் ஜ.செ.க. மீண்டெழுந்து சீன சமூகத்தின் நம்பிக்கையை மறுபடியும் சம்பாதிக்க இயலுமா அல்லது சபாவில் ஏற்பட்ட நிலைமைக்கு உள்ளாகுமா என்று அதன் அடுத்தடுத்த நகர்வுகளில் தெரியவரும்.

























