சபா மாநிலத்திலிருந்து வசூலிக்கப்படும் கூட்டாட்சி வருவாயில் 40 சதவீத பங்கைப் பெறுவதற்கான உரிமையை உறுதிப்படுத்தும் கோத்தா கினபாலு உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்துப் புத்ராஜெயா மேல்முறையீடு செய்யாது.
இன்று ஒரு அறிக்கையில், அட்டர்னி ஜெனரல் அலுவலகம் (AGC), கூட்டரசு அரசியலமைப்பின் பிரிவு 112C இன் கீழ் “சிறப்பு மானியம்” என்ற அரசியலமைப்பு கொள்கையை மத்திய அரசு மதிக்கிறது என்றும், சபா அரசாங்கத்துடன் உடனடியாகப் பேச்சுவார்த்தைகளைத் தொடர ஒப்புக்கொண்டுள்ளதாகவும் கூறியது.
“எனவே, 40 சதவீத வருவாய் உரிமைக்கு எதிராக மேல்முறையீடு செய்ய வேண்டாம் என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது”.
“இதன் விளைவாக, மத்திய அரசு உடனடியாகச் சபா மாநில அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கும்,” என்று AGC தெரிவித்துள்ளது.
அரசாங்கத்திற்கு எதிராகச் சபா சட்ட சங்கம் (SLS) தாக்கல் செய்த நீதித்துறை மறுஆய்வு மனுவில் நீதிமன்றத்தின் தீர்ப்பைப் பற்றி விவாதிக்க பிரதமர் அன்வார் இப்ராஹிம் தலைமையில் இன்று நடைபெற்ற சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தின்போது இந்த முடிவு எடுக்கப்பட்டது.
அக்டோபர் 17 அன்று, கோத்தா கினபாலு உயர் நீதிமன்றம், கிட்டத்தட்ட ஐந்து தசாப்தங்களாகச் சபாவின் கூட்டாட்சி வருவாயில் 40 சதவீத பங்கை மதிக்கத் தவறியதன் மூலம், கூட்டாட்சி அரசாங்கம் சட்டவிரோதமாகவும், கூட்டாட்சி அரசியலமைப்பின் கீழ் அதன் அதிகாரங்களுக்கு அப்பாற்பட்டதாகவும் செயல்பட்டதாகத் தீர்ப்பளித்தது.
நீதிபதி செலஸ்டினா ஸ்டூயல் காலிட், மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் கூட்டாகப் பிறப்பித்த சிறப்பு மானிய மறுஆய்வு உத்தரவுகள் “சட்டவிரோதமானவை, தீவிரமானவை மற்றும் பகுத்தறிவற்றவை,” என்றும், அரசியலமைப்பை மீறுவதாகவும் அறிவித்தார்.
“10வது அட்டவணையின் கீழ் உத்தேசிக்கப்பட்ட சிறப்பு மானியங்களை வழங்குவது கூட்டமைப்பின் தரப்பில் சட்டவிரோதமானது,” என்று அவர் கூறினார்.
இரண்டாவது மற்றும் மூன்றாவது மறுஆய்வு உத்தரவுகள் செல்லாது என்றும் நீதிபதி கண்டறிந்து, சபா சட்ட சங்கத்தின் (SLS) விண்ணப்பத்தை முழுமையாக அனுமதித்தார்.
அரசியலமைப்பின் பிரிவு 112D இன் கீழ் புத்ராஜெயா சபா அரசாங்கத்துடன் ஒரு புதிய வருவாய் மறுஆய்வை நடத்தவும், 1974 முதல் 2021 வரையிலான ஒவ்வொரு நிதியாண்டிற்கும் மாநிலத்தின் 40 சதவீத உரிமையை ஒப்புக் கொள்ளவும் நீதிமன்றம் ஒரு கட்டளை உத்தரவைப் பிறப்பித்தது. மறுஆய்வு 90 நாட்களுக்குள் தொடங்கி 180 நாட்களுக்குள் முடிவடையும்.
புத்ராஜெயாவும் சபா அரசாங்கமும் தங்கள் அதிகாரங்களைத் துஷ்பிரயோகம் செய்து, அரசியலமைப்பு கடமைகளை மீறியதாக நீதிபதி கூறிய கருத்துக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்போவதாக ஏஜிசி கூறியிருந்தது.
இந்தத் தீர்ப்பு, 1974 முதல் இரு அரசாங்கங்களின் பரிவர்த்தனைகள் தொடர்பானது என்று நிறுவனம் கூறியது.
“2021 க்குப் பிறகு செய்யப்பட்ட மதிப்பாய்வுகள் (வருவாய் கோரிக்கை தொடர்பாக) சட்டவிரோதமானவை, பகுத்தறிவற்றவை மற்றும் நடைமுறைச் சிக்கல்களைக் கொண்டிருந்தன என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது”.
“எனவே, தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பிழைகளுக்கு எதிராக மத்திய அரசு மேல்முறையீடு செய்யும்.”
சபாவின் தற்காலிக முதலமைச்சர் ஹாஜிஜி நூர், புத்ராஜெயாவின் இந்த முடிவைப் பாராட்டி, அதை “வரலாற்று சிறப்புமிக்கது” என்று வர்ணித்தார்.
அந்த முடிவு சபாவின் விருப்பங்களைப் பற்றிய பிரதமர் அன்வார் இப்ராஹிம் அவர்களின் புரிதலையும், கூட்டாட்சி அரசியலமைப்பில் உறுதிசெய்யப்பட்ட உரிமைகளை நிலைநிறுத்துவதில் அவருடைய அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகிறது என்றும் அவர் கூறினார்.
சபா முதல்வர் ஹாஜிஜி நூர்
“மேல்முறையீடு செய்யாத முடிவு, கபுங்கன் ராக்யாட் சபா தலைமையிலான மாநில அரசாங்கத்திற்கும் புத்ராஜெயாவிற்கும் இடையிலான வலுவான செயல்பாட்டு உறவைப் பிரதிபலிக்கிறது,” என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
“பிரதமருடனான எனது சந்திப்புகளில், சபாவின் அரசியலமைப்பு உரிமைகள் மதிக்கப்பட வேண்டும், மற்றும் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற மாநில அரசாங்கத்தின் உறுதியான நிலைப்பாட்டை நான் தெரிவித்துள்ளேன்,” என்று அவர் மேலும் கூறினார், சபா மக்கள் அன்வாரின் தலைமையைத் தொடர்ந்து ஆதரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிப்பது, தீபகற்ப மலேசியாவுடனான சபாவின் வளர்ச்சி இடைவெளியைக் குறைப்பதற்கான ஒரு முக்கியமான படியாகும், குறிப்பாக உள்கட்டமைப்பு, விவசாயம் மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்ந்து பின்தங்கிய கிராமப்புறங்களில் என்று ஹாஜிஜி கூறினார்.
“சபாஹான்கள் போதுமான அளவு காத்திருந்தனர். இப்போது தேவைப்படுவது உறுதியான நடவடிக்கையும், 40 சதவீத உரிமையை மதித்துச் செயல்படுத்துவதற்கான உண்மையான அரசியல் விருப்பமும் தான்,” என்று அவர் கூறினார்.

























