கைரி: உளவுத்துறை அறிக்கை எல்லாம் தேர்தலில் வேட்பாளராக உதவாது

அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடின்,உறுப்பினர்கள் தேர்தலில் வேட்பாளர்களாக தேர்ந்தெடுக்கப்படுவதற்காக அரசாங்க அமைப்புகளின் சாதகமான அறிக்கைகளைக் காண்பிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இன்று   கோலாலம்பூரில், புத்ரா உலக வாணிக மையத்தில், அம்னோ இளைஞர் பகுதிக் கூட்டத்தை முடித்து வைத்து உரையாற்றிய  கைரி, தம்மை அணுகிய சிலர் அவர்களுக்குச் சாதகமான பல்வேறு அறிக்கைகளைக் காண்பித்து வேட்பாளர்களாக நியமிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டதாக சொன்னார்.

“அவர்கள் போலீஸ் சிறப்புப் பிரிவு, இராணுவ உளவுத்துறை, சிறப்புப் பணித்துறை(ஜாஸா) போன்றவற்றை அணுகி சாதகமான அறிக்கைகளைப் பெற்றிருக்கலாம்.

“இவற்றால் ஆகப் போவது ஒன்றுமில்லை. ஏனென்றால் அரசாங்கத் துறைகளிடம் பெற்ற  அறிக்கைகளைக் காண்பித்து வேட்பாளர்களாகும் முயற்சிகளை அனுமதிக்கப் போவதில்லை எனக் கட்சித் தலைவர் நஜிப் அப்துல் ரசாக் கூறியுள்ளார்”, என அவர் சொன்னார்.

வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட ஒருவருக்கு மக்கள் ஆதரவும் கட்சி உறுப்பினர்களின் ஆதரவும் இருப்பது அவசியம்  என்பதை நஜிப் வலியுறுத்தியிருப்பதாக அம்னோ இளைஞர் தலைவர் குறிப்பிட்டார்.

காலையில் கொள்கை உரையாற்றியபோது, உறுப்பினர்கள் தங்களுக்குள்ள தொடர்புகளைப் பயன்படுத்தி வேட்பாளராகும் முயற்சியில் ஈடுபடக்கூடாது என்று கைரி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS: