பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம், இனவாதத்தை அடக்கி வைக்காவிட்டால் அது அரசாங்கத்தின் சீரமைப்புப் பணிகளைக் குலைத்துவிடும் என எச்சரிக்கிறார்.
“ஹரப்பான் மாற்றங்களையும் சீரமைப்புகளையும் கொண்டுவர முனைந்தாலும் இனத் தொடர்பு விவகாரங்கள் மோசமடைந்து வருவதுபோல் தெரிகிறது”, என்று அன்வார் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.
“இன, சமூக மருட்டல்களைச் சாதாரணமாக நினைத்து ஒதுக்கிவிடக்கூடாது. அவற்றை அடக்கி வைக்காவிட்டால் நாட்டைச் சீரமைக்கும் முயற்சிகளையே நாசமாக்கி விடும்”.
14வது பொதுத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் வெற்றியின் முதலாமாண்டு நிறைவையொட்டி வெளியிட்ட அறிக்கையில் அன்வார் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
அம்னோவும் பாஸும் மலாய்க்காரர் ஆதரவைப் பெற இன உணர்வுகளைத் தூண்டிவிடுவதாகக் கூறப்படுகிறது.
ஹரப்பான் அதன் சீரமைப்புப் பணிகளில் உருப்படியான பொருளாதார நடவடிக்கைகளும் உள்ளிட்டிருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அன்வார் வலியுறுத்தினார்.