அமைச்சரவைப் பட்டியல் அரசு இதழில் வெளியிடப்படாதது ஏன்? விளக்கமளிப்பீர் அல்லது வெளியேறுவீர்- பாஸ்

பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கம் புத்ரா ஜெயாவில் ஆட்சி ஏற்று ஓராண்டு ஆகியும் அதன் அமைச்சர்களின் பட்டியல் இன்னமும் அரசிதழில் வெளியிடப்படாதிருப்பது ஏன் என்பதைத் தெரிந்துகொள்ள பாஸ் விரும்புகிறது.

இதற்குத் தக்க பதில் அளிக்கவில்லை என்றால் அதற்கு அமைச்சரவை “முழுப் பொறுப்பேற்று உடனடியாக பதவி விலக வேண்டும்” என பாஸ் தலைமைச் செயலாளர் தகியுடின் ஹசான் கூறினார்.

“அவர்களின் நியமனத்தை அரசிதழில் வெளியிடுவதை அரசாங்கம் சாதாரண விசயமாக நினைத்து விடக்கூடாது. இது அமைச்சரவை பொறுப்புக்களையும் அவர்களின் அதிகாரத்தையும் சட்டப்பூர்வமாக்கும் ஒரு செயலாகும்”, என்றவர் ஓர் அறிக்கையில் கூறினார்.

அரசு இதழில் பார்த்தபோது அதில் பிரதமர் டாக்டர் மகாதிர் பெயர் மட்டுமே கடந்த ஆண்டு மே 22-இல் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனுடன் ஒப்பிடும்போது, 2013-இல், தேர்தல் முடிந்த இரண்டு மாதங்களிலேயே, ஜூன் 26, 2013-இல் பிஎன் அதன் அமைச்சர்களின் பட்டியலை அரசிதழில் வெளியிட்டது.

ஆனால், ஹரப்பான் ஓராண்டு ஆகியும் ஏன் அதைச் செய்யவில்லை என்பது விளங்கவில்லை.