சண்டாகான் தேர்தல் பரப்புரைமீது 13 புகார்கள்

சண்டாகான் இடைத் தேர்தல் பரப்புரைமீது போலீ ஸ் 12 புகார்களையும் எம்ஏசிசி ஒரு புகாரையும் பெற்றதாக தேர்தல் ஆணைய(இசி) தலைவர் அஸ்ஹார் ஹருன் தெரிவித்தார்.

“எனக்குத் தெரிந்து நேற்றுவரை 12 போலீஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளன. எல்லாமே சிறுசிறு புகார்கள், அனுமதி பெறாமல் பரப்புரை செய்தார்கள், போட்டியிடாத கட்சியின் சின்னங்கள் பயன்படுத்தப்பட்டன என்பனபோன்ற புகார்கள்.

“எம்ஏசிசி-இடம் ஒரு புகார் செய்யப்பட்டது. பரப்புரையின்போது ஏதோ வாக்குறுதி அளித்தார்களாம், அதுவும் சின்ன விசயம்தான் என்று நினைக்கிறேன்”, என்று அஸ்ஹார் எஸ்கே தஞ்சோங் பப்பாட் 1 வாக்களிப்பு நிலையத்துக்கு வருகையளித்த பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழ்ந்ததாகவோ தேர்தல் சட்டங்கள் கடுமையான முறையில் மீறப்பட்டதாகவோ புகார் எதுவும் இல்லை.

சண்டாகானில் கடந்த இரண்டு வாரங்களாக நடந்த தேர்தல் பரப்புரை ஒழுங்குமுறையாக நடந்துள்ளது என்று கூறி அதற்காக அவர் பாராட்டுத் தெரிவித்தார்.

“பரப்புரையில் வெறுப்புப் பேச்சு இல்லை, சினமூட்டும் வகையில் எதுவும் நடக்கவில்லை, வேட்பாளர்களும் கட்சிகளும் ஆதரவாளர்களும் நடந்துகொண்ட விதம் மனநிறைவளிக்கிறது.

“எல்லாமே அமைதியாக நடந்தது, ஒழுங்காக நடந்தது. அதைக் காண மகிழ்ச்சியாக இருந்தது”, என்றார்.

சண்டாகான் இடைத் தேர்தல் வாக்களிப்பு இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மாலை 5 மணிக்கு வாக்களிப்பு முடிவுக்கு வரும்.

சண்டாகான் இடைத் தேர்தலில் ஐந்து-முனைப் போட்டி நிலவுகிறது.

டிஏபி வேட்பாளர் விவியான் வொங், பிபிஎஸ் வேட்பாளர் லிண்டா சென் ஆகியோரும் ஹம்சா அப்துல்லா, சுலைமான் அப்துல் சமட், சியா சியு யொங் ஆகிய மூன்று சுயேச்சை வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

மார்ச் மாதம் அந்தத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டீபன் வொங் மாரடைப்பால் காலமானதையடுத்து அங்கு இடைத் தேர்தல் நடைபெறுகிறது.