‘மகாதிரை விடுங்கள் ஐயா, அவர் எடுத்துக்கொண்ட வேலையைச் செய்து முடிக்கட்டும்’- பெர்சத்து உ.த.

டாக்டர் மகாதிர் முகம்மட் எவ்வளவு காலத்துக்குப் பிரதமராக இருப்பார் என்ற சர்ச்சையில் டிஏபி தலைவர் லிம் கிட் சியாங் ஈடுபடக்கூடாது என்று பார்டி பிரிபூமி மலேசியா(பெர்சத்து) உதவித் தலைவர் அப்துல் ரஷிட் அப்துல் ரஹ்மான் அறிவுறுத்தினார்.

மகாதிர் விலகிக்கொள்ள விருப்பமில்லாமல் பிரதமர் பதவியைப் பிடித்துக் கொண்டிருக்கிறார் என்று நினைக்கும் வகையில் லிம் அறிக்கைகளை வெளியிடக் கூடாது என்றாரவர்.

“மகாதிர் திறமை மிக்கவர். நாட்டை மீட்டெடுக்க அவருக்கென ஒரு திட்டம் வைத்திருப்பார். எனவே, மற்றவர்கள் இடையில் புகுந்து அறிக்கைகளை விடுத்து குறுக்கீடு செய்ய வேண்டும்.

“மகாதிரே சொல்லியிருக்கிறார், நேரம் வரும்போது பதவி விலகுவதாக, அவர் சொன்னபடி செய்வார் என்ற நம்பிக்கை எனக்குண்டு. ஆனால், இப்போதைக்கு அவர் தம்மால் முடியும்வரை, மக்களின் ஆதரவு உள்ளவரை பிரதமராக தொடர்வார்”, என்றாரவர்.

மகாதிர் வாக்குறுதி அளித்ததுபோல் பிரதமர் பதவியை பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமிடம் ஒப்படைப்பார், அப்படி ஒப்படைக்காவிட்டால் தான் அரசியலைவிட்டு விலகிக் கொள்ளவும் தயார் 15வது பொதுத் தேர்தலில் போட்டியிடாமலிருக்கவும் தயார் என்றும் லிம் கூறியிருந்தது குறித்துக் கருத்துரைத்தபோது அப்துல் ரஷிட் அவ்வாறு கூறினார்.