கிளந்தானில் ரமலான் மாதத்தில் உணவகங்களை இரவு 8.30இலிருந்து 10 மணிவரை மூடுவது ஓர் உத்தரவல்ல, வெறும் ஆலோசனைதான் என்கிறார் கிளந்தான் மந்திரி புசார் அஹமட் யாக்கூப்.
கடைகளை மூட வேண்டும் என்பதற்கு வர்த்தகர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்து இந்த மாற்றம்.
இதன் தொடர்பில் ஊராட்சி மன்றங்களுக்குப் புதிய அறிவிக்கை அனுப்பப்பட்டு விட்டதாக அஹமட் தெரிவித்ததாக ஹரியான் மெட்ரோ கூறியது.
இதற்குமுன்பு கிளந்தானில் ரமலான் மாதத்தில் முஸ்லிம்கள் தராவி தொழுகை செய்வதை ஊக்குவிக்க குறிப்பிட்ட அந்த நேரத்தில் உணவகங்களை மூட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்பட்டது.
அது பற்றி உணவக உரிமையாளர்களின் கருத்தை அறிய அவர்களைச் சந்தித்தபோது, அது ஒரு கடுமையான நடவடிக்கை என்றும் அதனால் உணவகப் பணியாளர்களின் வருமானம் பாதிக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
மற்ற தொழில்கள் எல்லாம் நடக்கையில் உணவகங்களை மட்டும் ஏன் மூட வேண்டும் என்றும் அவர்கள் கேள்வி கேட்டனர்.