நிலம் மாற்றிவிடப்பட்ட விவகாரம் தொடர்பில் முன்னாள் தற்காப்பு அமைச்சர்களை விசாரிக்க வேண்டும்

தாம் அமைச்சராக இருந்த காலத்தில் இராணுவ நிலங்கள் மாற்றி விடப்பட்டதில் தாம் ஆதாயம் அடைந்ததாக நிரூபிக்க முடியுமா என்று முன்னாள் தற்காப்பு அமைச்சர் ஹிஷாமுடின் உசேன் சவால் விடுத்திருப்பதை அபத்தமானது என்று முன்னாள் படைவீரர் சங்கமான பெட்ரியோட் வருணித்தது.

நிலம் மாற்றிவிடப்பட்டதில் ஹிஷாமுடின் பயனடைந்தாரா இல்லையா என்பது போலீஸ் மற்றும் எம்ஏசிசி விசாரணையில் தெரியவரும் என்று பெட்ரியோட் தலைவர் முகம்மட் அர்ஷாட் ராஜி கூறினார்.

ஹிஷாமுடின் பயனடைந்தாரா இல்லையா என்பது பிரச்னை அல்ல அவர் தற்காப்பு அமைச்சராக இருந்த காலத்தில் அது நடந்துள்ளது என்பதால் அவர்தான் அதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்றாரவர்.

“இதன் தொடர்பில் விரைவில் விசாரணை செய்யப்பட வேண்டும் என பெட்ரியோட் கேட்டுக்கொள்கிறது. சந்தேகம் இருக்கும் பட்சத்தில் 1997இலிருந்து 2018வரை இருந்த தற்காப்பு அமைச்சர்களையும் விசாரிக்க வேண்டும்”, என்றாரவர்.

1186 ஹெக்டார் இரணுவ நிலங்கள் மாற்றிவிடப்பட்டதில் அரசாங்கத்துக்கு ரிம500 மில்லியனுக்குமேல் இழப்பு ஏற்பட்டிருப்பதாகக் கூறுவதைத் தற்காப்பு அமைச்சர் முகம்மட் சாபுவும் துணை அமைச்சர் லியு சின் டோங்கும் நிரூபிக்க முடியுமா என்று ஹிஷாமுடின் நேற்று சவால் விடுத்தார்.