பண முறைகேடு, நம்பிக்கை மோசடி, ஊழல் குற்றங்கள் என 47 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும் முன்னாள் துணைப் பிரதமர் அஹமட் ஜாஹிட் ஹமிடி பறிமுதல் செய்யப்பட்ட அவருடைய கடப்பிதழைத் திரும்பப் பெறும் முயற்சியில் தோல்வியுற்றார். மெக்கா சென்று உம்ரா செய்வதற்காக அந்தக் கடப்பிதழ் அவருக்குத் தேவைப்பட்டது.
அவரது முறையீட்டைச் செவிமடுத்த மூவரடங்கிய முறையீட்டு நீதிபதிகள் குழு ஒருமனதாக அதைத் தள்ளுபடி செய்தது.
நீதிபதிகள் குழுவுக்கு உமி கல்தோம் அப்துல் மஜிட் தலைமை தாங்கினார். அக்குழுவில் மற்றுமிரண்டு நீதிபதிகள் ஹர்மிண்டர் சிங் தாலிவாலும் ஸ்டீபன் சங்கும் ஆவர்.
தீர்ப்பை வாசித்த உமி கல்தோம், கோலாலும்பூர் உயர் நீதிமன்றம் வாதியின் விண்ணப்பத்தை நிராகரித்ததில் சரியான முடிவையே செய்துள்ளது என்றார்.
ஜாஹிட் மே 3-இல், கைப்பற்றப்பட்ட தம் கடப்பிதழை உம்ரா செல்வதற்காக தற்காலிகமாக திரும்பக் கொடுக்குமாறு கேட்டு உயர் நீதிமன்றத்திடம் மனுச் செய்திருந்தார்.
அவரது மனுவை விசாரித்த நீதிபதி கோலின் லாரன்ஸ் செகுயிரா, நோன்பு மாதத்தில் உம்மா செய்யப் பரிந்துரைக்கப்பட்டிருந்தாலும் உம்ரா செய்வது கட்டாயக் கடமை அல்ல என்று கூறி அதைத் தள்ளுபடி செய்தார்.