ஜாஹிட், ஹிஷாம், இஸ்மாயில் ஆகியோரின் ஜிஇ 14 வெற்றிமீது விசாரணை தேவை- லிம்

டிஏபியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங், நான்கு நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு இராணுவ வாக்காளர்கள் மாற்றிவிடப்பட்டது சட்டவிரோதமான செயல் என்று கூறப்படுவதையும் அதனால் அத்தொகுதிகளின் முடிவுகளைச் செல்லாது என்று அறிவிக்கலாமா என்பதையும் தேர்தல் ஆணையம்(இசி) ஆராய வேண்டும் என்று விரும்புகிறார்.

பிஎன் அமைச்சர்களான அஹ்மட் ஜாஹிட் ஹமிடி(பாகான் டத்தோ), ஹிஷாமுடின் உசேன்(செம்ப்ரோங்), டாக்டர் எஸ்.சுப்ரமணியம்(செகாமாட்), இஸ்மாயில் சப்ரி யாக்கூப்(பெரா) ஆகியோரின் தொகுதிகளில்தான் மேற்படிச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. நால்வரில் சுப்ரமணியம் மட்டும் தேர்தலில் தோற்றார்.

தற்காப்பு அமைச்சு மீதான விசாரணை ஒன்றில் இராணுவ வாக்காளர்கள் மாற்றி விடப்பட்டதில் இசி அதிகாரிகளும் உடந்தை என்பது தெரிய வந்ததை அடுத்து லிம் இவ்வாறு கோரிக்கை விடுத்தார்.

இசி அதிகாரிகளும் தற்காப்பு அமைச்சின் அதிகாரிகளும் 14வது பொதுத் தேர்தலில் அமைச்சர்களுக்கு ஆதரவு திரட்டித் தருவதற்காக சட்டவிரோதமானதும் ஜனநாயகத்துக்கு முரணானதுமான செயலில் ஈடுபட்டது நஜிப்(அப்துல் ரசாக்) அரசாங்கத்தின் அப்பட்டமான அதிகாரமீறலைக் காண்பிக்கிறது என்றாரவர்.

கடந்த வாரம் இது குறித்துக் கருத்துரைத்த இசி தலைவர் அஸ்ஹார் ஹருன், அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதற்குமுன் விசாரணை அறிக்கைக்காகக் காத்திருப்பதாகச் சொன்னார்.