அம்னோ ஆலோசனை மன்றத் தலைவர் தெங்கு ரசாலி ஹம்சா, திடீர் பொதுத் தேர்தல் வரும் சாத்தியம் இருப்பதால் அம்னோ அதற்குத் தயாராக வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.
தேர்தலுக்குத் தயாராவது என்றால் பாஸுடனும் மற்ற பிஎன் உறுப்புக் கட்சிகளுடனும் இட ஒதுக்கீடுமீது பேச்சு நடத்துவதும் அதில் அடங்கும் என்று குவா மூசாங் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் கூறினார்.
“இதற்கு முதலில் முடிவு காண வேண்டும். ஏனென்றால், பிறகு நமக்குள் பிரச்னை உருவாக இடமளிக்கக் கூடாது. அதேவேளை நமக்கு விசுவாசமாக இருந்து வந்துள்ள மலாய்க்காரர்-அல்லாத நண்பர்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
“அதை (பேச்சுகளை) இப்போதே தொடங்க வேண்டும். திடீர் தேர்தல் வந்து விட்டால் என்ன செய்வது?
“அதற்குச் சாத்தியம் உண்டு. தலைமைத்துவ மாற்றம் நிகழும்போது திடீர் தேர்தலும் வரலாம்”, என்றவர் கூறியதாக உத்துசான் மலேசியா அறிவித்துள்ளது.
ஆனால், அம்னோ இடைக்காலத் தலைவரான முகம்மட் ஹசான் வேறு விதமாக நினைக்கிறார்.
அண்மையில் சண்டாகானில் ஒரு செராமாவில் கலந்துகொண்ட அவர், டாக்டர் மகாதிர் வாக்குறுதி அளித்தபடி ஈராண்டுகளில் பிரதமர் பதவியை அன்வாரிடம் ஒப்படைக்க மாட்டார் என்றார்.
மகாதிரின் குணம் நன்கு தெரியும் என்று கூறிக்கொண்ட முகம்மட், அவர் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டுப் புதிய தேர்தலை நடத்துவார் என்றார்.