மலேசியர்களுக்கு எதிரான மரணத் தண்டனையை நிறுத்துங்கள், வழக்குரைஞர் சிங்கப்பூரிடம் வலியுறுத்து

எதிர்வரும் வெள்ளிக்கிழமை, சிங்கப்பூரில் தூக்கிலிடப்படவுள்ள மலேசியரின் தண்டனையை நிறுத்தும்படி, சுதந்திரத்திற்கான வழக்குரைஞர் குழு (லோயர்ஸ் ஃபோர் லிபர்ட்டி) சிங்கப்பூரைக் கேட்டுக்கொண்டுள்ளது.

அதேசமயம், தூக்குத் தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் பி பன்னீர்செல்வத்தின், 32, தூக்குத் தண்டனையைச் சிறைவாசமாக மாற்ற வேண்டும் என்று மலேசிய அரசு சிங்கப்பூரை வலியுறுத்த வேண்டும் என்றும் அக்குழுவின் ஆலோசகர் என் சுரேந்திரன் ஓர் அறிக்கையில் அறிவுறுத்தியுள்ளார்.

மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான அறிவிப்பு, மிகக் குறுகிய காலத்தில் கைதியின் குடும்பத்தினருக்குக் கொடுக்கப்பட்டுள்ளதற்கு சுரேந்திரன் வருத்தம் தெரிவித்தார்.

“கோலாலம்பூரில் உள்ள பன்னீர் குடும்பத்திற்கு, மே 24, 2019 அன்று சிங்கப்பூர், சாங்கி சிறைச்சாலையில், வெள்ளிக்கிழமை, மே 24 காலையில், பன்னீர் தூக்கிலிடப்படவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

“அந்த அறிவிப்புக் கடிதத்தில், பன்னீரின் ‘அடக்கத்திற்குத் தேவையான முன் ஏற்பாடு’களைச் செய்யுமாறும், சிங்கப்பூர் சிறைச்சாலை சேவை மையம் அவரின் குடும்பத்தினருக்கு அழைப்பு விடுத்துள்ளது.

“பன்னீருடன் நேரம் செலவிடவும், அவரின் இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகளைச் செய்யவும் ஒரு வார கால அவகாசம் வழங்கியிருப்பது நியாயமற்றது,” என்று சுரேந்திரன் கூறினார்.

கடந்த 2014 செப்டம்பரில், 51.84 கிராம் ஹெரோயின்ஸ் வைத்திருந்ததற்காக, உட்லண்ஸ் சோதனைச் சாவடியில் பிடிபட்ட பன்னீருக்கு, ஜூன் 27, 2017-ல் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது.

தூக்குத் தண்டனை வழங்கப்பட்ட போது, அப்போதை மருந்து பற்றி தான் அறிந்திருக்கவில்லை என்று பன்னீர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி, தீர்ப்பு வழங்கிய சிங்கப்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி, பன்னீர் நடுவராக மட்டுமே செயல்பட்டதை உணர்ந்திருந்தார்.

மேலும், மலேசியர்கள் இதுபோன்ற சம்பவங்களில் சிக்கிக்கொள்வதற்கு சூத்திரதாரிகள் யார், பன்னீர் எவ்வாறு அவர்களின் வலையில் மாட்டி குற்றவாளி ஆனார் என்பது போன்ற தகவல்களை, சிங்கப்பூர் அதிகாரிகள் தெரிந்துகொள்ள, பன்னீர் உதவி உள்ளதாகவும் நீதிபதி தீர்ப்பு வாசிக்கப்பட்டபோது தெரிவித்தார்.

அந்த நபர், இன்னும் மலேசியாவில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக நம்பப்படுகிறது.

இருப்பினும், இந்நிலையில் பன்னீருக்கு வழக்கறிஞரின் உதவி பெறும் சான்றிதழ மறுக்கப்பட்டது நியாயமற்றது என்றார் சுரேந்திரன்.

“அந்தச் சான்றிதழ், நீதிமன்றத்தில், தூக்குத் தண்டனைக்குப் பதிலாக ஆயுள் தண்டனை கிடைக்க அனுமதிக்கும்,” என்று அவர் கூறினார்.