பாங்கி கோயில் சாலையை எம்பிகேஜே தலையிட்டுத் திறந்து வைத்தது

ஒரு மேம்பாட்டாளரும் பாங்கி தோட்டத்து முன்னாள் ஊழியர்களும் சர்ச்சையிட்டுக் கொண்டிருக்கும் லாடாங் பாங்கி ஸ்ரீமகாமாரியம்மன் ஆலயத்துச் செல்லும் சாலையை காஜாங் முனிசிபல் மன்றம்(எம்பிகேஜே) தலையிட்டுத் திறந்து வைத்துள்ளது.

ஆலயத்துக்குச் செல்லும் சாலையை மூடி கேட்டுக்குப் பூட்டும் போட்டு வைத்திருந்தார் மேம்பாட்டாளர். எம்பிகேஜே அதிகாரிகளும் மாவட்ட போலீசும் நேற்று மாலை 5மணிக்கு முன்னதாக பூட்டை  உடைத்து   சாலையை   திறந்து  விட்டனர் என்று பிஎஸ்எம் மத்திய குழு உறுப்பினர் எஸ்.அருள்செல்வன் கூறினார். 5 மணிக்குள் பூட்டு திறக்கப்பட வேண்டும் என்று லாடாங் பாங்கி முன்னாள் ஊழியர்கள் கெடு வைத்திருந்தார்கள். திறக்காவிட்டால் தாங்களே அதை உடைக்கப்போவதாகவும் கூறி இருந்தனர்.

“ஐந்து மணிக்கு அவர்கள்   கேட்டை அடைந்தபோது அது திறக்கப் பட்டிருந்தது”, என்றாரவர்.

முனிசிபல் மன்றம், கவுன்சிலர்கள், மாநில ஆட்சி மன்ற உறுப்பினர்கள் ஏன் அனைத்துலக வர்த்தக, தொழில் அமைச்சர் ஒங் கியான் மிங் போன்றோர் தெரிவித்த ஆலோசனைகளை எல்லாம் அந்த “திமிர்பிடித்த” மேம்பாட்டாளர் கேட்க மறுத்துவிட்டதாக அருள்செல்வன் சாடினார்.

எம்பிகேஜே-யும் விவகாரத்தைத் தீர்ப்பதில் “மந்தமாகவே செயல்பட்டது” என்று கூறிய அவர், அதைப் பார்க்கையில் மேம்பாட்டாளருக்கு அதிகாரத்தில் உள்ளவர்களின் பக்கபலம் இருக்கலாமோ என்ற எண்ணம் தோன்றுகிறது என்றார்.

“புதிய மலேசியாவில் மக்களின் உரிமைகள் செல்வாக்குமிக்க மேம்பாட்டாளர்களாலோ அதிகார நிலையில் அவர்களுக்குள்ள தொடர்புகளாலோ மீறப்படலாகாது என்று எதிர்பார்க்கின்றோம்.

“இப்போதைக்கு ஆலய மணிகள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன”, என்றாரவர்.