பகாங் அரசு அம்மாநிலத்துக்கு எண்ணெய் உரிமப் பணம் அல்லது “வாங் இசான்(கருணை நிதி) கொடுப்பது பற்றி புத்ரா ஜெயா பரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறது.
அதன் தொடர்பில் விரைவில் ஒரு கடிதம் அனுப்பப்படும் என்றும் எவ்வளவு கொடுப்பது என்பதைக் கூட்டரசு அரசாங்கத்தின் முடிவுக்கே விட்டு விடுவதாகவும் மந்திரி புசார் வான் ரொஸ்டி வான் இஸ்மாயில் கூறினார்.
“அது குறித்து முந்தைய அரசாங்கம் அறிவித்தது. முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மாநில அரசுக்கு ரிம100 மில்லியன் உரிமப் பணம் கொடுக்கப்படுமென்று அறிவித்திருந்தார்.
“அவ்விவகாரத்தைக் கூட்டரசு அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என்பதற்காக இன்று நினைவுப்படுத்துகிறேன்”, என்று நேற்றிரவு பெட்ரோனாஸ் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் வான் ரொஸ்டி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.