மார்ச் 22-இல் பெர்லிஸ் முப்தி முகம்மட் அஸ்ரி சைனுல் அபிடின் காருக்குத் தீ வைத்ததாக சந்தேகிக்கப்படும் நபரைப் போலீஸ் கைது செய்துள்ளது.
வேலையில்லாத அந்நபர் சனிக்கிழமை இரவு மணி 2.45க்கு ஆராவ், கம்போங் ஜெலம்போக்கில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார் என பெர்லிஸ் போலீஸ் தலைவர் நூர் முஷார் முகம்மட் கூறினார்.
“அக்குற்றச் செயலைப் புரிந்ததாக ஒப்புக்கொண்ட அந்நபர், இன்னமும் தலைமறைவாகவுள்ள ‘மை தோமோய்’ என்னும் ஒரு நண்பனின் உதவியுடன் ரிம500-க்கு அதைச் செய்ததாகக் கூறினார். அதைச் செய்வதற்கு வேறொரு நபர் பணம் கொடுத்தாராம்”, என்றவர் தெரிவித்தார்.
அச்சம்பவத்தில் மேலும் ஐவர் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் நூர் முஷார் கூறினார். அவர்களில் மூவரின் அடையாளம் தெரிந்து விட்டது. அவர்கள் விரைவில் கைதாவார்கள் என்றாரவர்.
அவர்களில் ஒருவர் அஸ்ரின் முகத்தில் அமிலம் வீசியெறிந்தால் மேலும் அதிக பணம் தருவதாகச் சொல்லியிருக்கிறார். ஆனால், அவர்கள் மறுத்து விட்டார்களாம்.