‘மே18 – முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை’ , ஜொகூர்பாரு மாநகரில் 10-ஆம் ஆண்டு நினைவேந்தல்

கடந்த 2009, மே18-ம் நாள் இலங்கை அரசு நடத்திய முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் தங்கள் இன்னுயிரை ஈந்த அப்பாவி பொதுமக்களை நினைவு கோரும் நிகழ்ச்சி, நேற்றிரவு ஜொகூர் பாரு மாநகரில் நடந்தேறியது.

ஜொகூர் செம்பருத்தி தோழர்கள் ஏற்பாட்டில், தொடர்ந்து 10-ம் ஆண்டாக நடந்த இந்த ‘மெழுகுவர்த்தி ஏந்தல் நினைவஞ்சலி’ நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்கள் இன, மத பாகுபாடின்றி கலந்துகொண்டு; ஈழ மக்களுக்கான தங்கள் ஆதரவைப் பதிவு செய்தனர்.

“போர் முடிந்து 10 ஆண்டுகள் ஆகியும், இன்னும் இலங்கை அரசு கொடூரமான பயங்கரவாத சட்டத்தைப் பயன்படுத்தி ஈழத்தமிழர்களை அச்சுறுத்தி வருகிறது. போர் காலத்தில் காணாமல் போனோரின் நிலை என்னவென்று தெரியாது அவர்களின் உறவினர்கள் இன்றுவரை கண்ணீர் போராட்டம் நடத்தி வருகின்றனர்,” என்று ஜொகூர் செம்பருத்தி தோழர்கள் இயக்கப் பொறுப்பாளர்களில் ஒருவரான இராஜன் தெரிவித்தார்.

செம்பருத்தி தோழர்கள் இயக்கத்தின் ஆலோசகர் தர்மலிங்கம், முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த துயரச் சம்பவங்களை வந்திருந்தோர் மத்தியில் பகிர்ந்துகொண்டார்.

“இனப்படுகொலைக்கான ஆதாரங்கள், சாட்சியங்கள் சர்வதேச அளவில் உறுதி செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், இப்போர் குற்றங்களை சர்வதேசக் குழு விசாரணை நடத்தாமல், குற்றம் சுமத்தப்பட்ட அரசையே விசாரணை மேற்கொள்ள அனுமதி வழங்கியிருப்பது, ஐநா மனித உரிமை அவையில் தமிழருக்கான நீதி மறுக்கப்பட்டதாகவே நாம் உணர்கிறோம். மேலும், போரில் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு நீதி கிடைக்க உலக நாடுகள் அக்கறை கொண்டிருக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது,’ என்று தர்மலிங்கம் தனது உரையில் குறிப்பிட்டார்.

மேலும், இந்த இனப்படுகொலைக்கு எதிராக குரல் எழுப்பாமல், நாம் வாய்மூடி கிடந்தால், முள்ளிவாய்க்கால் மட்டுமின்றி, மியான்மார், யேமன், பாலஸ்தீனம் போன்ற நாடுகளில் நடக்கும் இனவழிப்பு சம்பவங்கள், உலகின் மற்ற பகுதிகளிலும் தொடர்ந்துகொண்டே இருக்கும் என்றும் அவர் சொன்னார்.

அதனை தடுத்து நிறுத்த வேண்டுமானால், இந்தக் குற்றங்களைப் புரிந்தவர்களை நாம் சுதந்திரமாக நடமாட விடக்கூடாது. அப்படி நாம் அவர்களைச் சுதந்திரமாக விட்டோமானால், அது உலகக் கலாச்சாரம் மற்றும் மரபுகளை விஷம் போல தாக்கும் என அவர் மேலும் சொன்னார்.

“இந்தத் தமிழர்கள், ரோஹிங்கியர்கள் மற்றும் யேமனியர்கள் சிறுபான்மையினர், பலவீனமானவர்கள், அதனால் அவர்கள் நாட்டு அரசாங்கம் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. எனவே, அவர்களுக்காக நாம் குரல் கொடுப்போம்.

“இந்த மெழுகுவர்த்தி ஏந்தல் நிகழ்ச்சி, அந்த அப்பாவி மனிதர்களின் மரணங்களை நினைவில் நிறுத்தவே. இது உலகம் முழுவதும் உள்ள பிற இனப் படுகொலைகளையும் தடுத்து நிறுத்த வழிவகுக்கட்டும்,” என தர்மலிங்கம் தெரிவித்தார்.

நேற்றிரவு நடந்த இந்த நினைவேந்தல் கூடலில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டி, 6 கோரிக்கைகளையும் ஏற்பாட்டாளர்கள் முன்வைத்தனர். தமிழில் மட்டுமின்றி, மலாய் மற்றும் மெண்டரின் மொழியிலும் வாசிக்கப்பட்ட கோரிக்கைகள் :-

  1. 2009-ம் ஆண்டு இலங்கை இராணுவம் நடத்திய போர் குற்றங்களுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் வெளிப்படையான, சுதந்திரமான சர்வதேச விசாரணை வேண்டும்.
  2. வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் உள்ள இலங்கை ஆயுதப் படையினரை முழுவதுமாக விலக்க வேண்டும்.
  3. தமிழர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட தனியார் நிலங்களைத் திரும்ப ஒப்படைக்கப்பட வேண்டும்.
  4. இலங்கை இராணுவத்தால் இரகசிய விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்.
  5. 2009-க்குப் பின் காணாமல் போனோரின் தகவல்கள் இலங்கை அரசிடம் உள்ளது. அதனை உடனடியாக வெளியிட வேண்டும்.
  6. தமிழர்களின் பாரம்பரிய வாழ்விடங்களில், சிங்களர்களின் கட்டாயக் குடியேற்றத்தை நிறுத்த வேண்டும்.

இக்கோரிக்கைகள் உள்ளடக்கிய மனு, மலேசிய ஐநா மனித உரிமை ஆணையத்திற்கு விரைவில் கையளிக்கப்படவுள்ளதாக இராஜன் தெரிவித்தார்.

நேற்றிரவு நடந்தேறிய நிகழ்ச்சியில், மலேசியத் தமிழ்நெறிக் கழகம், ஹிண்ராப்ட் போன்ற இயக்கங்களின் பொறுப்பாளர்களும், ஜொகூர் மாநில பிகேஆர், அமானா தலைவர்களும் கலந்துகொண்டு உரையாற்றினர். அவர்களோடு, தீராம் சட்டமன்ற உறுப்பினர் கோபாலகிருஷ்ணனும் பாதிக்கப்பட்ட மக்களுக்காகப் பேசினார்.

சுமார் 2 மணி நேரம், ஜாலான் உங்கு புவான், ராஜ மாரியம்மன் ஆலயத்தின் வெளியே, வீதியில் நடந்த நிகழ்ச்சியில், ‘ஹீல் தி வெர்ல்ட்’ (Heal The World) எனும் பாடல் மற்றும் கவிதைகள் வந்திருந்தோரின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.