மூன்று செயற்கை தீவுகளை நிர்மாணிக்க, மாநிலத்தின் தெற்குக் கடலோரத் தூர்த்தல் திட்டத்தை இரத்து செய்ய வேண்டும் எனும் பிரதமர் டாக்டர் மகாதீரை வலியுறுத்திவரும் பினாங்கு ஃபோரம் இயக்கத்திற்கு ஆதரவாக, இன்று நாற்பத்து ஐந்து அரசு சாரா அமைப்புகள் ஒன்று கூடின.
இந்த அரசு சாரா அமைப்புகளைச் சார்ந்தவர்கள், பினாங்கு, மலாக்கா, ஜொகூர் ஆகிய மாநிலங்களில், கடல் தூர்த்தல் திட்டத்தினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நன்கு அறிந்தவர்கள் என பினாங்கு ஃபோரம் அமைப்பின் உறுப்பினர் கூ சல்மா நாசுதியோன் தெரிவித்தார்.
மே 10-ம் தேதி, பினாங்கின் தென் பகுதியில் நடந்துவரும் இத்திட்டத்தினால் ஏற்படக்கூடிய 20 பாதிப்புகளை எடுத்துரைத்து, பொது மக்களிடம் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டதாகவும், இதுவரை சுமார் 12,000 பேர், இத்திட்டத்தை இரத்து செய்ய வேண்டுமென ஆதரவு தெரிவித்து கையெழுத்து இட்டுள்ளதாகக் கூ மேலும் தெரிவித்தார்.
“அந்த 20 பாதிப்புகளில், மீனவர்கள் எதிர்நோக்கும் இழப்புகள், சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் விளைவுகள், பண விரயங்கள் – பண நெருக்கடி ஏற்படும்போது இறுதியில் அந்தச் சுமை மக்களிடமே திணிக்கப்படும்,” என்பது போன்றவை அடங்கியிருப்பதாக, ஜாலான் மஸ்ஜிட் நெகிரியில் அமைந்திருக்கும், பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் தலைமையகத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளார் சந்திப்பில் கூ சொன்னார்.
“4,500 ஏக்கர் நிலத்தை மறுசீரமைப்பு (தூர்த்தல்) திட்டம் பற்றி மக்கள் பேச வேண்டும், காரணம், மாநில பிரதிநிதிகள் இந்த விவகாரம் தொட்டு கேள்வி எழுப்பக்கூடாது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது,” எனக் கூறினர்.
கடந்தாண்டு, மே 9-ம் தேதி, 14-வது பொதுத் தேர்தலில், பக்காத்தான் ஹராப்பானுக்கு வாக்களித்து, பெரும் அதிகாரம் வழங்கியதன் மூலம், மக்களில் பெரும்பான்மையினர் அவர்களின் திட்டங்களை ஆதரிப்பதாக மாநில அரசாங்கத் தலைவர்கள் கூறி வரும்போது, இந்த வாக்கெடுப்பு நடைபெற வேண்டுமா என்று கூ-விடம் கேட்கப்பட்டது.
“கடந்த பொதுத் தேர்தலில், மக்கள் பிரதமர் நஜிப்பையும் ஊழலையும் எதிர்க்கவே வாக்களித்தனர். அதற்காக பிஎச் அரசாங்கத்தின் அனைத்து திட்டங்களையும் (தேர்தல் வாக்குறுதிகள்) மக்கள் ஆதரிக்கிறார்கள் என்று பொருளல்ல,” என்றார் அவர்.
கடந்த மாதம், பினாங்கு முதல்வர் சோவ் கோன் இயூ, 18 நிபந்தனைகளுடன் அந்த கடல் தூர்த்தல் திட்டத்திற்கு அனுமதியளித்தது தங்களுக்கு அதிர்ச்சியைத் தந்ததாக கூ கூறினார்.
அந்த மூன்று செயற்கை தீவுகளின் மேம்பாட்டு திட்டத்தின் மூலம், பினாங்கு போக்குவரத்து மெகா திட்டத்திற்கு நிதி கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதற்கு RM46 பில்லியன் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் திட்டம், பினாங்கில் போக்குவரத்து பிரச்சனைகளைத் தீர்க்காது என்பதால், இது பயனற்றது என பயனீட்டாளர் சங்கத் துணைத் தலைவர் மோஹிடின் அப்துல் காதர் கூறினார்.