தற்காப்பு அமைச்சு நிலங்கள் மாற்றிவிடப்பட்ட விவகாரம் தொடர்பில் ஜாஹிட்டும் விசாரணைக்கு அழைக்கப்படலாம்

முன்னாள் துணைப் பிரதமர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி தற்காப்பு அமைச்சின் நிலங்கள் சர்ச்சைக்குரிய முறையில் மாற்றிவிடப்பட்டது மீதான விசாரணைக்கு உதவ விரைவில் அழைக்கப்படுவார் என்று தெரிகிறது.

“அதற்கான சாத்தியம் இருப்பதை மறுக்கவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அழைக்கப்படுவார்கள்”, என்று எம்ஏசிசி துணைத் தலைமை ஆணையர் (நடவடிக்கைகள்) அஸாம் பாக்கி இன்று கோலாலும்பூரில் செய்தியாளர்கலிடம் தெரிவித்தார்.

ஜாஹிட் 2009-இலிருந்து 2013வரை தற்காப்பு அமைச்சராக இருந்துள்ளார்.

முன்னதாக அஸாம், தற்காப்பு அமைச்சு செய்த இரண்டு புகார்களின்மீது எம்ஏசிசி கடந்த சில மாதங்களாக விசாரணை மேற்கொண்டு வருவதாகக் கூறினார்.

தற்காப்பு அமைச்சின் 16 நிலங்கள் மாற்றிவிடப்பட்டதுமீதான கணக்குத் தணிக்கை அறிக்கையையும் எம்ஏசிசி ஆராய்ந்து வருகிறது. அவ்வறிக்கை நிலமாற்றம் ஒரு தரப்புக்கு மட்டுமே சாதகமாக அமைந்திருப்பதாகவும் அதனால் அரசாங்கத்துக்கு ரிம500 மில்லியன் இழப்பு ஏற்பட்டதாகவும் கூறியது.

இவ்விவகாரத்தில் ஊழல் மற்றும் அதிகாரமீறல் நிகழ்ந்திருப்பதாக இன்னும் நிறுவப்படாததால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் அஸாம் கூறினார்.