நேற்று மாலை, சீர்திருத்த போராளி எஸ் ஜெயதாஸ் காலமானது குறித்து, துணைப் பிரதமர் டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயில் இன்று தனது துயரத்தைத் தெரிவித்தார்.
“1998 சீர்திருத்தப் போராட்டம் முதல், சகோதரர் ஜெயதாஸ் சற்குணவேல் பற்றி நான் அறிந்து வந்துள்ளேன். சில நாட்களுக்கு முன்பு, நானும் அன்வார் இப்ராஹிமும் அவரை மருத்துவமனையில் சென்று கண்டோம். அவரின் மரணம் வறுத்தமளிக்கிறது,” என்று தனது டுவிட்டர் செய்தியின் வழி அவர் தெரிவித்தார்.
சிறுநீரகக் கோளார் காரணமாக, கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயதாஸ், நேற்று மாலை 4 மணியளவில் காலமானார்.
சீர்திருத்தப் போராட்டம் மற்றும் ஹிண்ராப் இயக்கத்தில் துடிப்புடன் செயல்பட்டுவந்த ஜெயதாஸ், பிகேஆர் கட்சியில் சில முக்கியப் பதவிகளையும் வகித்து வந்தார்.
மலேசிய இந்தியர்களின் நிலைமை, தடுப்புக்காவலில் இறப்பு மற்றும் இந்துக் கோயில்களின் இடிபாடு போன்ற போராட்டங்களில் ஈடுபட்டதன் காரணமாக போலிஸ் அவரைப் பலமுறை கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-பெர்னாமா